

சென்னை விளம்பர கிளப் நடத்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர், என்.சீனிவாசன், மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த கடும் ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய என்.சீனிவாசன் கூறியதாவது:
அப்போது ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி இந்திய சிமெண்ட்ஸ் அணியை வாங்கி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். நான் உடனே இந்தக் கடிதத்தைச் சுட்டிக்காட்டி அப்போதைய பிசிசிஐ தலைவர் ஷரத் பவாருக்கு நான் பிசிசிஐ பொருளாளராக இருந்ததால் அணி உரிமைக்கு ஒப்பந்தப் புள்ளி அனுப்ப முடியுமா என்று கேட்டேன். அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் என் மீது எழுந்த இரட்டைப் பதவி விவகாரத்தில் இந்த அனுமதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.
பவார் எனக்கு அனுப்பிய பதிலில் ‘நான் என்னுடைய சகாக்களுடன் ஆலோசனை நடத்தினேன், இந்தியா சிமெண்ட்ஸ் டெண்டர் எடுப்பதில் தவறில்லை’ என்று எழுத்து பூர்வமாக அனுமதி வழங்கிய பிறகே முறையான நடைமுறைகளின் படி பிசிசிஐ கேட்க நாங்கள் அணி ஒன்றை வாங்க திட்டமிட்டோம்.
அணியை வாங்குவது என்றவுடனேயே என்ன செலவானாலும் முதலில் தோனியை ஒப்பந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த முடிவுதான் முக்கியமான முடிவு அவர் 2007 டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தார். மற்றவர்களிடமிருந்து தோனி வேறுபட்டவர்.
2018-ல் மீண்டும் மஞ்சள் சீருடையுடன் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும், நிச்சயம் பெரிய அளவில் மீண்டும் வருவோம்.
இவ்வாறு கூறினார் சீனிவாசன்.