Published : 19 Dec 2013 10:00 AM
Last Updated : 19 Dec 2013 10:00 AM

கபில்தேவுக்கு பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது

2013-ம் ஆண்டுக்கான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

பிசிசிஐ தலைவர் சீனிவாசன், செயலர் சஞ்சய் பட்டேல், மூத்த பத்திரிகையாளர் அயாஸ் மேனன் ஆகியோர் அடங்கிய விருதுக் குழு சென்னையில்கூடியது. அப்போது வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு கபில்தேவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒருமனதாக கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டுக்கான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது கபில்தேவுக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் டிராபி மற்றும் ரூ.25 லட்சத்துக்கான காசோலை அளிக்கப்படும். பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது கபில்தேவுக்கு விருது அளிக்கப்படும். பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்தவரான கபில்தேவ், இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் மற்றும் 5,000 ரன்களை எட்டிய முதல் வீரர் கபில்தேவ் ஆவார். இதேபோல் 255 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கபில்தேவ் 253 விக்கெட்டுகளையும், 3,783 ரன்களையும் எடுத்துள்ளார்.

2007-ல் இந்திய கிரிக்கெட் லீக்கில் கபில்தேவ் இணைந்ததைத் தொடர்ந்து அவருக்கு பிசிசிஐ தடை விதித்தது. இந்திய கிரிக்கெட்

லீக்கில் இருந்து கபில்தேவ் விலகியதைத் தொடர்ந்து அவர் மீதான தடை கடந்த ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து பிசிசிஐயின் வருமானத்தில் இருந்து முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒருமுறை உதவித் தொகை ரூ.1.5 கோடி கபில்தேவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டுக்காக பங்காற்றி வருபவர்களுக்கு இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே.நாயுடுவின் பெயரில் 1994-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x