

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். அபுதாபியில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் குஷல் பெரேரா, தில்ஷான் ஆகியோர் தலா 8 ரன்களிலும், தினேஷ் சன்டிமல் 5 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். குமார் சங்ககாரா-பிரியஞ்சன் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது. சங்ககாரா 51 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு கேப்டன் மேத்யூஸுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த அறிமுக வீரர் பிரியஞ்சன் 93 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பிரியஞ்சன் எடுத்த 74 ரன்களே இலங்கை வீரர் ஒருவர் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். முன்னதாக 1999-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமரசில்வா 55 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இதன்பிறகு மேத்யூஸ் 38 ரன்களிலும், பின்னர் வந்த விதாஞ்சே 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 48.5 ஓவர்களில் 225 ரன்களுக்கு சுருண்டது இலங்கை. பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் 4 விக்கெட்டுகளையும், உமர் குல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முகமது ஹபீஸ் சதம்
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் சர்ஜீல் கான் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அஹமது ஷெஸாத்துடன் இணைந்தார் முகமது ஹபீஸ். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஹபீஸ் 38 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். பாகிஸ்தான் 115 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் லக்மல். ஷெஸாத் 56 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சோயிப் மஸூத் களமிறங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹபீஸ், தில்ஷான் வீசிய 34-வது ஓவரில் பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தார். அவர் 98 பந்துகளில் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எட்டினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 9-வது சதம் இது. இதனால் பாகிஸ்தான் 41.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஹபீஸ் 119 பந்துகளில் 113, சோயிப் மஸூத் 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹபீஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான். இந்த ஆண்டில் மட்டும் 7 ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது பாகிஸ்தான். 2011-ல் அந்த அணி 6 ஒருநாள் தொடர்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
6-வது வீரர் ஹபீஸ்
இந்தப் போட்டியில் சதமடித்த முகமது ஹபீஸ், மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பேட்டை உயர்த்தியபோது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து போட்டியை ரசித்த தனது மனைவியை நோக்கி முத்தங்களை பறக்கவிட்டார். இந்தப் போட்டியில் சதமடித்ததன் மூலம் இரு அணிகளுக்கு இடையிலான ஒரு தொடரில் 3 சதங்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் முகமது ஹபீஸ். -பிடிஐ