Published : 12 Aug 2016 02:36 PM
Last Updated : 12 Aug 2016 02:36 PM

மொயின் அலி அபார சதத்தினால் மீண்டது இங்கிலாந்து

ஓவலில் நடைபெறும் 4-வது, இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முதல்நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 3 ரன்கள் எடுத்துள்ளது.

110/5 என்று தடுமாறிய இங்கிலாந்து அணியை மொயின் அலி 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 152 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து மீட்டார்.

மொயின் அலி 9 ரன்களில் இருந்த போது அசார் அலி கேட்ச் ஒன்றை விட்டார். இதனையடுத்து ஜானி பேர்ஸ்டோ (55) உடன் 93 ரன்களையும், கிறிஸ் வோக்ஸ் (45) உடன் 79 ரன்களையும் சேர்த்தார் மொயின் அலி. முன்னதாக வஹாப் ரியாஸ் நோ-பாலில் பேர்ஸ்டோவும் கேட்ச் கொடுத்தார், இந்த அதிர்ஷ்டங்களை இங்கிலாந்து சரியாகவே பயன்படுத்திக் கொண்டது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆனால் வஹாப் ரியாஸ்தான் இங்கிலாந்தின் சரிவுக்கு பிரதான காரணமாக இருந்தார். ஆக்ரோஷமான வேகம் மற்றும் பவுன்ஸ் அவரது பந்துகளில் காணப்பட்டதோடு, இங்கிலாந்தின் வானிலை மற்றும் பிட்ச் ஸ்விங்கிற்கும் உதவிகரமாக இருந்தது.

தொடர்ந்து இங்கிலாந்துக்காக 63, 86 நாட் அவுட் போன்ற சிறந்த பங்களிப்பைச் செய்து வரும் மொயின் அலி, 140 பந்துகளில் சதம் கண்ட போது, யாசிர் ஷாவை மிட்விக்கெட்டில் ரசிகர்களிடையே சிக்சருக்கு விரட்டி சதம் எடுத்தார்.

தொடக்கத்தில் அலிஸ்டர் குக், ஹேல்ஸ் 6 ஓவர்களை எளிதாகவே ஆடினர், ஆனால் ஹேல்ஸ் (6) மிட்விக்கெட்டில் யாசிர் ஷா கேட்சுக்கு அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார், பந்து முறையாக கேட்ச் எடுக்கப்பட்டதா என்ற உறுதியில்லை. காமிரா கோணங்களும் சரியாக இல்லை. ஏனெனில் சட்டென நடந்து முடிந்து விட்டதால் காமிராக்களால் அந்தக் கேட்சின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. ஹேல்ஸ் கடுப்புடன் வெளியேறினார்.

குக், ஜோ ரூட் இணைந்து ஜாக்கிரதையாக ஆடினர். வஹாப் ரியாஸ் பந்தில் அலிஸ்டர் குக் 34 ரன்களில் இருந்த போது லைஃப் ஒன்றைப் பெற்றார். அறிமுக வீரர் இப்திகார் கேட்சை விட்டார். ஆனால் அதன் பிறகு 1 ரன்னை மட்டுமே சேர்த்த குக், சொஹைல் கான் பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டார். அதன் பிறகு வஹாப் ரியாஸ் புகுந்தார், முதலில் ஜோ ரூட் 26 ரன்களில் வஹாப் ரியாஸின் ஸ்விங் மற்றும் எகிறு பந்துக்கு எட்ஜ் செய்தார். வஹாப் தனது வேகத்தைக் கூட்டிய காலக்கட்டமாகும் இது.

ஜேம்ஸ் வின்ஸ் ஆடாமல் விட்டுவிடக்கூடிய வஹாப் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். பேர்ஸ்டோ வாய்ப் ரியாஸின் நோ-பாலில் தப்பிக்க, கேரி பாலன்ஸுக்கு அதிர்ஷ்டம் இல்லை, வஹாப் பந்தில் ஸ்லிபில் அசார் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 110/5 என்று ஆனது.

மொயின் அலி, வஹாப் ரியாஸின் வேகப்பந்தில் ஹெல்மெட்டில் மட் என்று அடி வாங்கினார். 9-ல் அசார் அலி மொயின் அலிக்கு கேட்ச் விட்டார், மொகமது ஆமிர் கடுப்பானார். பிறகு 15 ரன்களில் ஷார்ட் லெக்கில் சற்றே கடினமான வாய்ப்பை இதே அசார் அலி, மொயின் அலிக்கு விட்டார்.

மொயின் அலி அதனை நன்றாகப் பயன்படுத்தி சதம் அடித்து அணியை மீட்டார். இங்கிலாந்து 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சொஹைல் கான் 5 விக்கெட்டுகளையும் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளையும் ஆமிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி சமி அஸ்லம் விக்கெட்டை எல்.பி.முறையில் ஸ்டூவர்ட் பிராடிடம் இழக்க பாகிஸ்தான் 3/1 என்று முதல்நாளை முடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x