

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. ஜாஸ் பட்லர் 38, ராணா 34, பொலார்டு 27, ஹர்திக் பாண்டியா 35 ரன்கள் எடுத்தனர். புனே அணி தரப்பில் இம்ரன் தகிர் 3, ரஜத் பாட்டியா 2 விக்கெட்கள் வீழ்த் தினர்.
185 ரன்கள் இலக்குடன் பேட் செய்த புனே அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான அஜிங்க்ய ரஹானே 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண் டரிகளுடன் 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 54 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்ட ரிகளுடன் 84 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 3 மற்றும் 4-வது பந்துகளை வீணடித்த தோனி கடைசி பந்தை தூக்கி அடித்தார். ஆனால் எல்லைக் கோட்டு அருகே நின்ற டிம் சவுத்தி கேட்ச்சை தவற விட்டார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.
பொலார்டு வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் 3 பந்துகளிலும் தலா ஒரு ரன்களே சேர்க்கப்பட்டது. எனினும் நம்பிக்கையுடன் விளையாடிய ஸ்மித் 4 மற்றும் 5-வது பந்தில் சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.
வெற்றி குறித்து ஸ்மித் கூறும் போது, “புனே ஆடுகளம் பேட் டிங்குக்கு அருமையாக இருந்தது. இறுதிக்கட்டத்தில் வெற்றி பெற்றது அதிர்ஷ்டமே. மும்பை அணி சுழற்பந்து வீச்சு மூலம் கடைசி ஓவரில் என்னை குறிவைப்பார்கள் என நினைத்தேன். இரு சிக்ஸர்கள் விளாசி வெற்றி பெற்றது சிறப்பான விஷயம்.
எங்களது பந்து வீச்சில் இம்ரன் தகிர் சிறப்பாக செயல்பட்டார். மிடில் ஓவர்களில் அவர் விக்கெட்கள் வீழ்த்தியது உதவியாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் எட்டக்கூடியதுதான்" என்றார்.