இந்தியா உட்பட 12 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்: ஜோஷ்னா, தீபிகா, வேலவன் பங்கேற்பு

இந்தியா உட்பட 12 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்: ஜோஷ்னா, தீபிகா, வேலவன் பங்கேற்பு
Updated on
2 min read

19-வது ஆசிய தனிநபர் சாம்பியன் ஷிப் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் நாளை (26-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரை இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் நடத்துகிறது.

இந்தியாவில் இந்த தொடர் 4-வது முறையாக நடத்தப்படுகிறது. 1998-ல் கொல்கத்தாவிலும், 2002 மற்றும் 2010-ல் சென்னையிலும் இந்த தொடர் நடைபெற்றது. 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் மீண்டும் இந்த போட்டி நடைபெறுகிறது. நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி தளத்திலும், எக்ஸ்பிரஸ் அவென்யூவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, ஹாங்காங், ஈரான், சிங்கப்பூர், நேபாளம், பிலிப்பைன்ஸ், கொரியா, ஜோர்டான், மலேசியா, கத்தார் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

ஹாங்காங்கை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகளான மேக்ஸ் லீ, அனி ஆகியோருக்கு இந்த தொடரில் முதல் நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் கோஸல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோ ருக்கு ஆடவர், மகளிர் பிரிவில் முறையே 2-ம் நிலை அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

9 முறை சாம்பியனான மலேசி யாவை சேர்ந்த வீராங்கனையான நிக்கோல் டேவிட் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை. அவர் 2013-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரையும் புறக்கணித்திருந்தார்.

அதேவேளையில் 2015-ம் ஆண்டு குவைத் போட்டியில் ஆடவர் பிரிவில் பட்டம் வென்ற ஹாங் காங்கை சேர்ந்த லியோ இந்த தொடரில் கலந்து கொள்கிறார். அவருக்கு தரநிலையில் 5-வது இடம் வழங்கப்பட் டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஆடவர் பிரிவில் சவுரவ் கோஸல், வேலவன் செந்தில் குமார், விக்ரம் மல்கோத்ரா, மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சாந்து, ஆதித்யா ஜகதாப் ஆகியோரும் மகளிர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சச்சிகா இங்கலே, சுனைனா குருவிலா, ஊர்வசி ஜோசி, லக் ஷயா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து ஆடவர் பிரிவில் பர்கான் மெஹ்பூப், பர்கான் ஸமான், டயாப் அஸ்லாம், வாக்கர் மெஹ்பூப் ஆகிய 4 வீரர்கள் கலந்து கொள்வதாக போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு இந்திய அரசு விசா வழங்கவில்லை. இதனால் பாகிஸ்தான் இந்த தொடரில் கலந்துகொள்வது நேற்றுவரை உறுதி செய்யப்படவில்லை என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தொடரில் சென்னையை சேர்ந்த இளம் வீரரரான வேலவன் செந்தில் குமார் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

மகளிர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ஹாங்காங்கை சேர்ந்த அனி சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது. சொந்த மண்ணில் விளை யாடுவதால் தீபிகா பல்லிகலும் அசத்த தயாராக உள்ளார்.

ஆசிய தனிநபர் சாம்பியன் ஷிப் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக ஒரே ஒருமுறை வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது. கடந்த 1996-ல் இந்தியாவின் மிஷா கிரேவல் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதற்கிடையே இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர், வீராங்கனைக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள வைர பிரேஸ்லட், பென்டன்ட் பரிசாக வழங்கப்படும் எனவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in