

2014 ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நடப்பு சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் விலகியுள்ளார்.
கடந்த அக்டோபரில் நடைபெற்ற வேலன்சியா ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது டிப்சரேவிச்சின் குதிங்காலில் ஏற்பட்ட காயம் முழுமையாகக் குணமடையாததால் அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால் காயம் குணமடைய மேலும் சில நாள்கள் ஆகும் என்பதால் இந்த முறை சென்னை ஓபனில் பங்கேற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு எப்போதும் ஆதரவளிக்கும் சென்னை ரசிகர்கள் இந்த முறையும் எனது ஆட்டத்தைப் பார்க்க காத்திருந்திருப்பார்கள். இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
புதிய சீசனைத் தொடங்குவதற்கு சென்னை ஓபன் எப்போதுமே எனக்குப் பிடித்த போட்டியாகும். சென்னையில் விளையாடியபோதெல்லாம் சிறப்பாக விளையாடிய அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன். அங்கு டென்னிஸ் விளையாடுவதை விரும்புகிறேன். காயத்திலிருந்து விரைவாக குணமடைந்து மீண்டும் டென்னிஸ் விளையாட ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
29 வயதாகும் டிப்சரேவிச், சர்வதேச தரவரிசையில் 36-வது இடத்தில் உள்ளார். கடந்த சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தனது 4-வது ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றினார் டிப்சரேவிச்.