Published : 14 Jun 2016 03:43 PM
Last Updated : 14 Jun 2016 03:43 PM

பீல்டிங் கோளாறுகள்; சாமுவேல்சின் அபார இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா தோல்வி

முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை மே.இ.தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 196/2 என்று இருந்த நிலையில் எளிதில் 300 ரன்களை எடுத்திருக்க வேண்டும் ஆனால் பின்னால் பவுண்டரிகள் வரத்து வறண்டு போனதால் 50 ஓவர்களில் 265/7 என்று மட்டுப்படுத்தப்பட்டது. இலக்கைத் துரத்திய மே.இ.தீவுகள் அணிக்கு பிளெட்சர் (27), சார்லஸ் (48) ஆகியோர் 9.5 ஓவர்களில் 76 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக முதல் 4 ஓவர்களில் 40 ரன்கள். பிறகு மர்லன் சாமுவேல்ஸ் 87 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் விளாசி ஸ்கோர் 240 ஆக இருந்த போது ரன் அவுட் ஆனார். ஆடம் ஸாம்ப்பாவை தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசினார் சாமுவேல்ஸ். மே.இ.தீவுகள் கடைசியில் 45.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வென்றது.

கவாஜா நழுவ விட்ட இரண்டு கேட்ச்கள்:

ஆந்த்ரே பிளெட்சர் 4 ரன்களில் இருந்த போது மிட் ஆனில் அடிக்க அங்கு கவாஜா தாழ்வாக வந்த கேட்சைப் பிடிக்கத் தவறினார். பிறகு சார்லஸ் 36 ரன்களில் இருந்த போது டீப்பில் மீண்டும் கவாஜா ஒரு வாய்ப்பை நழுவ விட்டார்.

ஸ்டார்க் இல்லாததால் பிளெட்சரும் சார்லஸும் பவுண்டரிகளை மனதில் கொண்டே இறங்கியது போல் தெரிந்தது. முதல் 7 ஓவர்களில் 9 பவுண்டரிகள் விளாசப்பட்டன. அந்த நிலையிலிருந்து மே.இ.தீவுகள் துரத்தலில் முழு கட்டுப்பாட்டுடன் இயங்கியது. இந்நிலையில்தான் முதல் 8 ஒவர்களில் 2 கேட்ச்களை கவாஜா விட்டார்.

இதனையடுத்து முதல் 10 ஓவர்களுக்குள் ஸ்கோர் 74 ரன்களுக்குச் சென்றது. பிறகு பாக்னர் கட்டரில் பிளெட்சரை ஏமாற்ற, ஆடம் ஸாம்பா அபாயகரமான சார்லஸை எல்.பி. செய்தார். ஆனால் ஸ்கோர் விகிதம் உயர்வாக இருந்ததையடுத்து சாமுவேல்ஸ், டேரன் பிராவோ செட்டில் ஆக நேரம் இருந்தது.

பிராவோவும் சாமுவேல்ஸும் இணைந்து அடுத்த 17 ஓவர்களில் 82 ரன்களை மேலும் சேர்த்தனர், அப்போது 63 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 39 ரன்களில் ஆடி வந்த டேரன் பிராவோவை அருமையான எழும்பிய லெக் பிரேக்கில் ஸாம்ப்பா எட்ஜ் செய்ய வைத்து வீழ்த்தினார். 115 பந்துகளில் 99 ரன்கள் தேவை என்ற நிலையில் சாமுவேல்சுடன் தினேஷ் ராம்தின் இணைந்தார்.

ஸாம்பாவை 41-வது ஓவரில் சாமுவேல்ஸ் 3 சிக்சர்களை அடுததடுத்து அடித்தார், இதில் முதல் ஷாட்டை டிராவிஸ் ஹெட் பவுண்டரி அருகே பிடித்து விட்டார் ஆனால் அவரால் சமநிலையை காக்க முடியவில்லை பந்து சிக்ஸ் ஆனது, அடுத்த 2 ஷாட்களும் இவரை மிகவும் சவுகரியமாக தாண்டிச் சென்றது. இதே ஓவரில் சாமுவேல்ஸ் ரன் அவுட் ஆனார். ஆனால் ராம்தினும், சாமுவேல்ஸும் இணைந்து 10 ஓவர்களில் 73 ரன்களைச் சேர்த்தனர். 40.4 ஓவர்களில் 240/4 என்ற நிலையில் மே.இ.தீவுகளின் வெற்றியை கெய்ரன் பொலார்ட் (16 நாட் அவுட்) உறுதி செய்தார். ராம்தின் 29 ரன்களுக்கும், ஹோல்டர் ரன் எடுக்காமலும் 44-வது ஓவரில் கூல்டர் நைல் பந்தில் வெளியேறினர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்த மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் அருமையான எழும்பிய பந்தின் மூலம் முதல் ஓவரில் ஏரோன் பின்ச்சை காலி செய்தார். அதன் பிறகு ஸ்மித், கவாஜா இணைந்து 34 ஓவர்களில் ஸ்கோரை 171 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ஸ்மித் 74 ரன்களுக்கு பிராத்வெய்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முழுதும் கட்டுப்பாட்டுடன் ஸ்மித் ஆடினார் என்று கூறமுடியாது, கவாஜா 123 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 98 ரன்கள் எடுத்து ஸ்மித்திற்கு அடுத்த படியாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். கடைசியில் ஜார்ஜ் பெய்லியின் நிதானத்துடன் கூடிய 55 ரன்களினால் ஆஸ்திரேலியா 265 ரன்களை எட்டியது.

மே.இ.தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர் அருமையாக வீசி 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பிராத்வெய்ட் 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் பொலார்ட் 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.சுனில் நரைன் 10 ஓவர்களில் 44 ரன்களை கொடுத்தாலும் அதில் 2 பவுண்டரி 1 சிக்சரை மட்டுமே கொடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் பவுண்டரி வறட்சிக்கு இவரும் ஒருகாரணம்.

ஆட்ட நாயகனாக மர்லன் சாமுவேல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்ப்பா 3 பவுண்டரிகள் 6 சிக்சர்களைக் கொடுத்து 7 ஓவர்களில் 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்ளைக் கைப்பற்றினார். கூல்டர் நைலும் 9.4 ஓவர்களில் 67 ரன்கள் என்று சாத்துமுறை வாங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x