

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான சீ சர்பிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை, விரைவில் தனுஷ்கோடியிலும் விளையாடலாம்.
ஹவாய் தீவு பழங்குடி இன மக்களின் பாரம்பரிய விளையாட்டான அலைச்சறுக்கு, இன்று உலக அளவில் பிரபலமான சாகஸ விளையாட்டாக உள்ளது. ஆனால், தீபகற்ப பிரதேசமான இந்தியாவில் இவ்விளையாட்டு பிரபலம் ஆகவில்லை.
சென்னை கோவளத்தில் அலைச்சறுக்கு விளையாட்டு வெளிநாட்டுப் பயணிகளாலும், உள்ளுர் மீனவ இளைஞர்களாலும் ஆர்வமாக விளையாடப்படுகிறது. அதேபோல தனுஷ்கோடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய கடற்பகுதிகள் அலைச்சறுக்கு விளையாட்டுக்கு ஏற்ற இடமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் உள்ள மன்னார் வளைகுடா வடக்கு கடல் பிராந்தியமும், பாக். ஜலசந்தி தெற்கு கடல் பிராந்தியமும் அலைச்சறுக்கு விளையாட நன்கு அலைகள் எழுந்து வரக்கூடியப் பகுதிகள் ஆகும்.
சமீபத்தில், பிரபல தனியார் குளிர்பான நிறுவனம் தனுஷ்கோடி கடல்களில் அலைச்சறுக்கு விளையாட்டை பரிசோதனை செய்து பார்த்தது. விரைவில், அலைச்சறுக்கு சார்ந்த போட்டிகளை தனுஷ்கோடியில் அந்நிறுவனத்தார் நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
1964 டிசம்பர் மாதப் புயலுக்குப் பின்னர் தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாத நிலையில், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அலைச்சறுக்கு விளையாட்டு, தனுஷ்கோடியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தனுஷ்கோடி மீனவர்கள் தொழில் நலிவடைந்து மாற்றுத் தொழில் தெரியாமல் தவித்து வருகின்றனர். அத்தகைய மீனவ இளைஞர்களை அலைச்சறுக்கு விளையாட்டின் பக்கம் திசை திருப்பி, அவர்களுக்குப் பயிற்சி அளித்தால் தனுஷ்கோடி தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை.