

444 ரன்கள் குவித்து 169 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பாகிஸ்தானை வீழ்த்திய டிரெண்ட் பிரிட்ஜ் ஒருநாள் போட்டியில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
ஒருநாள் போட்டிகளில் இலங்கை எடுத்த அதிகபட்ச ரன்களான 443 என்ற சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் தொடர்ச்சியாக 9 இருதரப்பு ஒருநாள் தொடர்களை விளையாடிய பாகிஸ்தான் ஒரு தொடரைக்கூட வெல்ல முடியவில்லை. அதாவது 1974-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை வென்றதோடு சரி அதன் பிறகு 8 ஒருநாள் தொடர்களை இங்கிலாந்தில் இழந்தது, ஒன்றில் டிரா செய்தது.
ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் எடுத்த அரைசதம் புதிய இங்கிலாந்து அரைசத சாதனையாகும். 2007-08-ல் நியூஸிலாந்துக்கு எதிராக பால் காலிங்வுட் எடுத்த அரைசதம் 24 பந்துகளில் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது அதிவேக அரைசத சாதனைக்குரியவரானார் ஜோஸ் பட்லர். நேற்றைய போட்டியில் இயான் மோர்கனும் 24 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
46.2 ஓவர்களில் இங்கிலாந்து 400 ரன்களை எட்டியது. 2005-06 தொடரில் ஜொஹான்னஸ்பர்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவும் 46.2 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது.
பட்லர், மோர்கன் இணைந்து எடுத்த 161 ரன்கள் கூட்டணியில் ஓவருக்கு ரன் விகிதம் 13.41. சதக்கூட்டணியில் இங்கிலாந்துக்கான அதிகபட்ச ரன் விகிதமாகும் இது. 150 ரன்கள் கூட்டணியில் இது 3-வது அதிவேக 150 ரன் கூட்டணியாகும்.
ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ் 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 248 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது விக்கெட்டுக்காக எந்த ஒரு அணியும் எடுக்காத ரன் கூட்டணியாகும். இது இங்கிலாந்துக்கு 3-வது அதிகபட்ச ரன் கூட்டணியாகும்.
ஒருநாள் போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக அரைசதம் அல்லது அதற்கு மேல் எடுத்த 6-வது இங்கிலாந்து வீரரானார் ஜோ ரூட். 65, 93, 61, 89, 85 இவரது கடைசி 5 இன்னிங்ஸ் ஸ்கோராகும். இதற்கு முன்னதாக ஜெஃப் பாய்காட், கிரகாம் கூச், அலெக் ஸ்டூவர்ட், ஜானதன் டிராட், மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளனர்.
இந்த ஆண்டில் ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர்களாக திகழ்கின்றனர்.
110 ரன்களை வாரி வழங்கிய வஹாப் ரியாஸ், ஒருநாள் போட்டிகளில் முதன் முதலில் 100 ரன்களை வழங்கிய பவுலரானார்.
இங்கிலாந்து அடித்த 59 பவுண்டரிகள் (43 நான்கு ரன்கள், 16 சிக்சர்கள்) ஒருநாள் போட்டிகளில் இலங்கையுடன் இணைந்த அதிகபட்ச பவுண்டரிகளாகும், இலங்கையும் ஹாலந்து அணிக்கு எதிராக 443 ரன்களைக் குவித்த போது 56 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்திருந்தது.
முதன் முதலாக ஒருநாள் போட்டிகளில் நம்பர் 11 வீரர் அரைசதம் கண்டார். அவர் மொகமது ஆமிர். நேற்று இவர் 58 ரன்களை அடித்தார். இதற்கு முன்பாக ஷோயப் அக்தர் இதே இங்கிலாந்துக்கு எதிராக 2003 உலகக்கோப்பையில் எடுத்த 43 ரன்களே அதிகபட்சம்.
அலெக்ஸ் ஹேல்ஸ் 171 ரன்கள் மூலம் ராபின் ஸ்மித் எடுத்த 167 ரன்கள் சாதனையை முறியடித்து இங்கிலாந்தின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன்களை எடுத்த வீரரானார்.