

இந்திய அணி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் முச்சத நாயகன் கருண் நாயரை இந்திய ஏ அணி கேப்டனாக்கி தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்புவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக அதி அற்புத முச்சதம் அடித்தார் கருண் நாயர். ஆனால் அதன் பிறகு அவரது ஸ்கோர் 26, 0. 23, 5 என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பினார்.
அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டிய நிலையில் தற்போது அவரை ஏ அணிக்குக் கேப்டனாக அனுப்பியது குறித்து முன்னாள் அணித்தேர்வுக்குழு உறுப்பினரும், விக்கெட் கீப்பருமான கிரண் மொரே கூறும்போது, “இலங்கை தொடருக்கு கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது அர்த்தமல்ல. அவர் எப்போது வேண்டுமானாலும் டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்படுவார். நான் இந்த ஐயத்தைப் புரிந்து கொள்கிறேன், தென் ஆப்பிரிக்க ஏ தொடர் இந்திய-இலங்கை தொடர் சமயத்தில் வருகிறது.
ஆனால் இதற்காக தேர்வுக்குழுவினர் கருண் நாயரை புறக்கணிப்பதாக நினைப்பதில் பொருளில்லை. ஏ அணிக்கு கேப்டன்சி செய்வது அவரது தன்னம்பிக்கையை உயர்த்தும்” என்று விளக்கம் அளித்தார்.
ஜூலை 26-ம் தேதி கண்டியில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இதே தேதியில்தான் தென் ஆப்பிரிக்காவில் இந்தியா ஏ அணியின் தொடரும் தொடங்குகிறது.