

யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் குரேஷியாவின் இவோ கார்லோவிக் 61 ஏஸ் சர்வ்களை அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
37 வயதான இவோ கார்லோவிக் 6 அடி 11 அங்குலம் உயரமுடையவர், ஏற்கெனவே 2009 டேவிஸ் கோப்பை டென்னிஸில் ஒரு போட்டியில் 78 ஏஸ் சர்வ்களை அடித்து சாதித்துள்ளார்.
இந்நிலையில் நடப்பு யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் தைவான் வீரர் லூ யென் சுன் என்பவருக்கு எதிராக 4-6, 7-6, 6-7, 7-6, 7-5 என்று போராடி வென்ற போட்டியில் 61 ஏஸ்களை அடித்து சாதனை புரிந்தார். யு.எஸ். ஓபனில் இதற்கு முன்பாக ஒரு போட்டியில் 49 ஏஸ்களை அடித்து சாதனையை வைத்திருந்தவர் ரிச்சர்ட் கிராஜிசெக். இவர் 1999-ம் ஆண்டு இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
மொத்தமாக ஒரு போட்டியில் அதிக ஏஸ்களை அடித்த சாதனையை வைத்திருப்பவர் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் இவர் 2010 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் 113 ஏஸ் சர்வ்களை அடித்து உலக சாதனை நிகழ்த்தினார். இதே 2010 விம்பிள்டனில் பிரான்ஸ் வீரர் நிகோலஸ் மாஹுட் 103 ஏஸ்களை அடித்து 2-வது இடம் பிடித்தார்.
3-வது இடத்தில் கார்லோவிக் 78 ஏஸ்களுடனும், தற்போது 4-வது இடத்திலும் இவரே 61 ஏஸ்களுடனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.