Published : 19 Oct 2014 12:41 PM
Last Updated : 19 Oct 2014 12:41 PM

இந்தூர் ஓபன்: ராம்குமாரை வீழ்த்தினார் மைனேனி

இந்தூர் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, தமிழக வீரர் ராம்குமாரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ராம்குமார் 2-6, 1-6 என்ற நேர் செட்களில் சாகேத் மைனேனியிடம் தோல்வி கண்டார். காலிறுதிக்கு முந்தைய சுற்று மற்றும் காலிறுதியில் முறையே யூகி பாம்ப்ரி மற்றும் சீன தைபேவின் டி சென்னுக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ராம்குமார், சாகேத் மைனேனியிடம் கடுமையாகப் போராடியபோதும் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.

இரு செட்களிலுமே தலா இருமுறை ராம்குமாரின் சர்வீஸை முறியடித்தார் மைனேனி. அதே நேரத்தில் 3 முறை மைனேனியின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பு ராம்குமாருக்கு கிடைத்த போதிலும் அதில் ஒன்றைக்கூட அவரால் கைப்பற்ற முடியவில்லை.

போட்டிக்கு பிறகு பேசிய ராம்குமார், “இன்று (நேற்று) எனது நாளாக அமையவில்லை. சரியாக ஆடமுடியாமல் போய்விட்டது. கடுமையாகப் போராடினேன். ஆனாலும் சாகேத் மைனேனிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. எனது வழக்கமான ஃபோர்ஹேண்ட் ஷாட்களையும், இயல்பான சர்வீஸையும் அடிக்க முடியாமல் போனது” என்றார்.

முந்தைய போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு எதிராக விளையாடியதால் சோர்வடைந்துவிட்டீர்களா என ராம்குமாரிடம் கேட்டபோது, “அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். இந்த நாள் என்னுடைய நாளாக இல்லை. அதேநேரத்தில் சாகேத் மைனேனி சிறப்பாக ஆடினார்” என்றார்.

முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் சாகேத் மைனேனி இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உக்ரைனின் அலெக்சாண்டர் நீடோவ்சோவை சந்திக்கிறார். அலெக்சாண்டர் தனது அரையிறுதியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஸ்டெபானோ டிரவாக்லியாவை தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-திவிஜ் சரண் ஜோடி 6-2, 4-6, 3-10 என்ற செட் கணக்கில் உக்ரைனின் அலெக்சாண்டர் நீடோவ்சோவ்-ஸ்பெயினின் அட்ரியான் ஜோடியிடம் தோல்வி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x