

இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் கொடியசைக்கும் வாய்ப்பு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு கிடைத்துள்ளது.
இந்த சீசனுக்கான பார்முலா 1 கார் பந்தயத்தின் 16-வது சுற்று இந்திய கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இண்டர்நேஷனல் சர்க்கியூட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கார் பந்தயத்தில் கொடியசைக்கும் வாய்ப்பை, இந்திய இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பெற்றுள்ளார்.
கார் பந்தயத்தில் முதல் கார் பந்தய தூரத்தைக் கடக்கும்போது கறுப்பு வெள்ளை கொடி காண்பிக்கப்படும். முதல்முறையாக 2011-ல் இந்திய கிராண்ட்ப்ரீ போட்டி நடைபெற்றபோது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், 2012 இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியின்போது லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான ககன் நரங்கும் கறுப்பு வெள்ளை கொடியை அசைத்தனர்.
இந்த முறை கறுப்பு வெள்ளைக் கொடியை அசைக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஒப்புதல் அளித்துள்ளதாக போட்டியை நடத்தும் ஜேப்பி குழுமம் தெரிவித்துள்ளது.