பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: 10-வது முறையாக பட்டம் வெல்லும் கனவில் களமிறங்குகிறார் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: 10-வது முறையாக பட்டம் வெல்லும் கனவில் களமிறங்குகிறார் நடால்
Updated on
2 min read

பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் பாரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றனர்.

ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச், 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 9 முறை பட்டம் வென்றுள்ள 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் 6 முதல் 10-வது இடங்களில் உள்ள கனடாவின் மிலோஸ் ரயோனிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், குரோஷியாவின் மரின் சிலிச், ஜப்பானின் நிஷிகோரி, ஜெர்மனியின் அலெச்சாண்டர் ஜிவெரேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெறும் இந்த போட்டியை 5-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் புறக்கணித்துள்ளார். விம்பிள்டன், அமெரிக்க ஓபனுக்கு தயாராகும் விதமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். களிமண் தரை ஆடுகளத்தின் ராஜாவான நடால் 10-வது முறையாக பட்டம் வெல்லும் கனவுடன் உள்ளார்.

சமீபகால போட்டிகளில் எழுச்சியுடன் விளையாடி உள்ள அவர் இந்த சீசனில் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப் போட்டி வரை கால் பதித்திருந்தார். இதையடுத்து நடைபெற்ற மான்டே கார்லோ ஓபனில் 10-வது முறையாக பட்டம் வென்ற நடால், களிமண் தரையில் 50-வது பட்டம் வென்ற ஒரே நபர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருந்தார்.

இதை தொடர்ந்து பார்சி லோனா, மாட்ரிட் ஓபனிலும் நடால் கோப்பையை வென்றார். இதன் மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளில் அதிக கோப்பையை வென்ற ஜோகோவிச்சின் (30 பட்டங்கள்) சாதனையை நடால் சமன் செய்திருந்தார். ஆட்ட வியூகங் களை மாற்றி உள்ள நடால் இம்முறை பிரெஞ்சு ஓபனில் மகுடம் சூட அனைத்து வகையிலும் தன்னை தயார் படுத்திக்கொண்டுள்ளார். நடால் பிரெஞ்சு ஓபனில் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடால் தனது முதல் சுற்றில், பிரான்சின் பெனோயிட் பேரை சந்திக்கிறார். போட்டி அட்டவணைப் படி நடால் அரை இறுதிக்கு முன்ன தாக ஜோகோவிச்சுடன் மோத வாய்ப்பில்லை. நடப்பு சாம்பிய னான ஜோகோவிச் தனது முதல் சுற்றில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸூடன் மோதுகிறார்.

முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, அரை இறுதியில் வாவ்ரிங்காவுடன் மோத வாய்ப்புள்ளது. ஆன்டி முர்ரே தனது முதல் சுற்றில் 85-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே குஸ்நெட்சோவாவுடன் மோதுகிறார். அதேவேளையில் வாவ்ரிங்கா, தகுதி நிலை வீரரரை சந்திக்கிறார்.

கால் இறுதி ஆட்டங்களில் முர்ரே - நிஷி கோரி, வாவ்ரிங்கா - மரின் சிலிச், நடால் - ரயோனிச், ஜோகோவிச் - டொமினிக் தியம் ஆகியோர் மோத வாய்ப்புகள் உள்ளன.

மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தனது முதல் சுற்றில் ரஷ்யாவின் மகரோவாவை சந்திக்கிறார். அரை இறுதியில் கெர்பர், நடப்பு சாம்பி யனான ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவுடன் மோத வாய்ப் புள்ளது.

முகுருசா தனது முதல் சுற்றில் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனை சந்திக்கிறார். 2-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ் கோவா தனது முதல் சுற்றில் சீனாவின் ஷாய்சாயுடன் மோது கிறார். அரை இறுதியில் கரோலினா, ருமேனியாவின் சிமோனா ஹாலப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.

4-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலப் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வில்லை. இதனால் அவர் இந்த தொடரில் பங்கேற்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை. போட்டி அட்டவணைப்படி கால் இறுதியில் கெர்பர் - ஸ்வெட்லனா குஸ்நெட்சோ, முகுருசா - டொமினிகா சிபுல்கோவா, எலினா ஸ்விட்டோலினா - சிமோனா ஹாலப், ஜோகன்னா கோன்டா - கரோலின பிலிஸ்கோவா ஆகியோர் மோத வாய்ப்புள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

ஆடவர் ஒற்றையர் பிரிவு

கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) - ஸ்டீபன் ராபர்ட் (பிரான்ஸ்)

லூக்காஸ் பவுலி (பிரான்ஸ்) - ஜூலியன் பென்னேட்டி (பிரான்ஸ்)

ஹாராசியோ (அர்ஜென்டினா) - அட்டிரியன் மான்நாரினோ (பிரான்ஸ்)

டொமினிக் தியம் (ஆஸ்திரியா) - பெர்னார்டு டாமிக் (ஆஸ்திரேலியா)

கார்சியா லோபஸ் (ஸ்பெயின்) - கில்லெஸ் முல்லர் (லக்சம்பர்க்)

மார்கோ டிரங்ஜெலிட்டி (அர்ஜென்டினா) - குயின்டின் ஹாலிஸ் (பிரான்ஸ்)

பென்ஜமின் போன்ஸி (பிரான்ஸ்) - டேனியல் மேட்வேதேவ் (ரஷ்யா)

டோமி ரோபர்டோ (ஸ்பெயின்) - டேனியல் இவான்ஸ் (ஜெர்மனி)

ஆல்பர்ட் ரமோஸ் (ஸ்பெயின்) - மாரிஸ் கோபில் (ருமேனியா)

மகளிர் ஒற்றையர் பிரிவு

பெட்ரா விட்டோவா (செக்குடியரசு) - ஜூலியா போஸர்அப் (அமெரிக்கா)

ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) - கேத்ரினா மகரோவா (ரஷ்யா)

கிறிஸ்டினா மெக்காலே (அமெரிக்கா) - குஸ்நெட்சோவா (ரஷ்யா)

வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) - கியாங் வாங் (சீனா)

கமீலா ஜியோர்கி (இத்தாலி) - ஓசேன் டோடின் (பிரான்ஸ்)

லாரா அராபரேனெ (ஸ்பெயின்) - டொமினிகா சிபுல்கோவா (சுலேவேக்கியா)

மோனிகா புயிக் (புயிர்டோரிகோ) - ரோபர்டா வின்சி (இத்தாலி)

விக்டோரிஜா கொலுபிக் (சுவிட்சர்லாந்து) - சாஸ்நோவிச் (பெல்லாரஸ்)

மிர்ஜானா லூசிக் பரோனி (குரோஷியா) - காக்லா பைடுகேக்கே (துருக்கி)

பெத்தானி மேடக் (அமெரிக்கா) - இவ்ஜெனியா ரோடினா (ரஷ்யா)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in