

தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து கும்பகோணம் மாண வர்கள் சாதனை படைத்தனர்.
இந்தியன் பவுண்டேசன் பனிச்சறுக்கு மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் 6-வது தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி (நேற்று) வரை நடைபெற்றன.
இந்தப் போட்டியில் பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா, கேரளா, பீஹார், ராஜஸ்தான், ஹிமாச்சால பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங் களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 10, 12, 14, 16 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இந்தப்போட்டி களில் பங்கேற்க தமிழகத்திலி ருந்து 9 மாணவர்கள் சென்றனர்.
இதில், 12 வயதுகுட்பட்டோர் பிரிவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வடக்கு மாதப்பா சந்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் தர்னேஷ்(12), 500 மீட்டர் போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்தார். இவர் கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதேபோல, 14 வயதுகுட் பட்டோர் பிரிவில் கும்பகோணம் மதர்கிளார்க் பள்ளி மாணவி விஸ்வலட்சுமி(13) இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிம்லா நகரின் துணை மேயர் திக்கந்தர்சிங் பன்வார் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.