Last Updated : 29 Jun, 2017 04:26 PM

 

Published : 29 Jun 2017 04:26 PM
Last Updated : 29 Jun 2017 04:26 PM

சிலி கோல் கீப்பரின் அபார ‘சேவ்’கள்: போர்ச்சுக்கலை வீழ்த்தி கான்பெடரேஷன் இறுதிக்குத் தகுதி

ஐரோப்பியக் கோப்பையை அடுத்து இன்னொரு கோப்பையை வெல்ல அயராது ஆடிய போர்ச்சுக்கல் அணியை கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து அரையிறுதியில் தென் அமெரிக்க அணியான சிலி வீழித்தி இறுதிக்கு முன்னேறியது.

ரஷ்யாவின் கஸானில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் சிலி 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை வெளியேற்றியது.

சிலி அணியின் கோல் கீப்பர் கிளாடியோ பிராவோ பெனால்டி ஷூட் அவுட்டில் 3 கோல்களைத் தடுத்தார். காயம் காரணமாக முதல் 2 போட்டிகளி சிலி அணி பிராவோவின் சேவைகளை இழந்த நிலையில் அரையிறுதியில் போர்ச்சுகலுக்கு ஆப்பு வைக்க வந்தது போல் உடல் தகுதி பெற்றார்.

பெனால்டி ஷூட் அவுட்டில் ரிகார்டோ குரேஸ்மா, ஜோ மவுடின்ஹோ, மற்றும் நானி ஆகிய போர்ச்சுகல் வீரர்களின் உதைகளை அனாயசமாக கோலுக்குள் செல்லாமல் தடுத்தார். கோப்பா அமெரிக்காவை வென்ற சிலி அணி 3-வது கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிக்கு முன்னேறியது.

ஷூட் அவுட்டில் சிலி அணிக்காக ஆர்த்யுரோ விடால், சார்லஸ் அராங்குயிஸ், அலெக்சிஸ் சான்சேஸ் ஆகியோர் கோல்களை அடித்தனர்.

முன்னதாக பிரதான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கூடுதல் நேரம் வரை ஆட்டம் சென்றும் கோல்களை அடிக்க முடியவில்லை என்பதால் பெனால்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது.

ஒருவிதத்தில் சிலி வெற்றி மூலம் அதற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்தது என்றே கூற வேண்டும். காரணம் கூடுதல் நேரத்தில் பெனால்டி கிடைக்க வேண்டியது நிராகரிக்கப்பட்டது. பிறகும் கூட இருமுறை கோல் வாய்ப்புக்கு மிக அருகில் வந்தது சிலி.

ரொனால்டோ பார்மில் இல்லை, சிலி அணி மெதுவே ஆட்டத்தை தொடக்க கணங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

வரும் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சிலி அணி ஜெர்மனி அல்லது மெக்சிகோ அணியைச் சந்திக்கும்.

மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி-மெக்சிகோ அணிகள் மோதுகின்றன.

பெனால்டி ஷூட் அவுட்டில் குரேஸ்மா, மவுட்டின்ஹோ அடித்த பலவீனமான ஷாட்டை சிலி கோல் கீப்பர் பிராவோ வலது புறம் டைவ் அடித்துத் தடுத்தார். கடைசியில் நானி அடித்த ஷாட் ஆச்சரியமாக இருந்தது அவர் ஏன் எளிதான ஒருஷாட்டை ஆடினார் என்று தெரியவில்லை, கிளாடியோ பிராவோ இடது புறம் பாய்ந்து தடுத்தார், சிலி வீர்ர்கள் அனைவரும் பிராவோ மீது கவிந்தனர்.

கூடுதல் நேரத்தில் சிலி வீரர் விடால் அடித்த சக்தி வாய்ந்த ஷாட் போஸ்டில் பட்டு திரும்பியது, அதை ரோட்ரிக்ஸ் அடிக்க அதுவும் மேல் கம்பியில் பட்டுச் சென்றது. ரொனால்டோவுக்கு சில வாய்ப்புகள் கிட்டின, குறிப்பாக 85-வது நிமிடத்தில் இவர் தலையால் அடித்த ஷாட் வெளியே சென்றது.

கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுக்கல் வீரர்களின் ‘நத்திங் ஷாட்கள்’ சிலிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x