Published : 13 Jun 2017 03:32 PM
Last Updated : 13 Jun 2017 03:32 PM

இந்தியா-இங்கிலாந்து இறுதிப் போட்டியை அனைவரும் விரும்புகின்றனர்: விராட் கோலி

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

திங்கள் மாலை லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா-பிரிட்டன் கலாச்சார ஆண்டை குறிக்கும் விதமாக இந்திய தூதரகம் இந்திய அணியினரை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, தோனி மற்றும் பிற இந்திய வீரர்களும் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பரூக் இஞ்ஜினியர், முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலிப் தோஷி, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் ஸ்ட்ராஸ், மான்ட்டி பனேசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கூறும்போது, “அரையிறுதியில் எந்த அணி விளையாடுகிறது என்பது விஷயமல்ல. லீக் போட்டிகள்தான் கடினமானவை. ஒரு போட்டியில் வென்றால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அனைவரும் இந்தியா-இங்கிலாந்து இறுதியில் மோதும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இரு அணிகளும் நன்றாக ஆடினால் இருநாட்டு ரசிகர்களுக்கும் அது விருந்தாக அமையும்.

எங்கு இந்திய அணி ஆடினாலும் பெரிய அளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து ஆதரவளிக்கிறார்கள், இது மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. இங்கிலாந்தில் வெயில் நாள் என்றால் கிரிக்கெட் ஆடுவதற்கு இதைவிடவும் சிறந்த இடம் வேறொன்றும் இல்லை என்றே கூற வேண்டும். மேகங்கள் சூழ்ந்தால் கொஞ்சம் கடினமாக இருக்கும், சவால் ஏற்படும்.

ஒருவர் என்ன ஸ்கோரில் பேட் செய்கிறார் என்ற போதிலும் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு தக்க மதிப்பளிக்க வேண்டும். இதுதான் இங்கு விளையாடுவதில் அழகான விஷயம். ஒரு பேட்ஸ்மெனாக இங்கு சூழ்நிலை நமக்கு சவால் அளிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x