

அயர்லாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 255 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கள் நாட்டு ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
அயர்லாந்தில் உள்ள டப்ளினில் இந்த போட்டி நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் இடது கை தொடக்க வீரர் ஷர்ஜீல் கான், ஷாகித் அப்ரீடிக்கு பிறகு பாகிஸ்தானின் அதிவேக சத நாயகனானார். அப்ரீடி 37 பந்துகளில் சதம் அடித்த சாதனையை இவர் முறியடிக்கவில்லை என்றாலும் 61 பந்துகளில் ஷர்ஜீல் கான் சதம் கண்டார், பிறகு 85 பந்துகளில் 16 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 152 ரன்கள் விளாச பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து அணியில் மெக்கார்த்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்ற இந்த அதிரடியிலும் தொடக்க பவுலர் முர்டாக் 10 ஓவர்களில் 38 ரன்களையே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றியது கவனிக்கத்தக்கது. அசார் அலி 1 ரன்னில் வெளியேற, மொகமது ஹபீஸ் 37 ரன்களையும் பாபர் ஆசம் 29 ரன்களையும் கடைசியில் ஷோயப் மாலிக் 57 (37 பந்துகள், 6 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களையும் மொகமது நவாஸ் 50 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களையும் எடுக்க பாகிஸ்தான் 337 ரன்களை குவித்தது.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 23.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 82 ரன்களுக்குச் சுருண்டது. பாகிஸ்தானின் இடது கை ஸ்பின்னர் இமாத் வாசிம் 14 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், உமர் குல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆமிர் மற்றும் நவாஸ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முற்றிலும் ஒருதலைபட்சமான இந்த ஆட்டத்தில் ஷர்ஜில் கான் அடித்த ரன்கள் அளவுக்குச் சமமாக பந்துகளைச் சந்திக்கவில்லை அயர்லாந்து அவர் 152 ரன்கள் அயர்லாந்து அணி மொத்தமும் சந்தித்த பந்துகள் 142.
ஷர்ஜீல் கானுக்கு அயர்லாந்து பவுலர்கள் சர்வதேச போட்டியில் வீசுவது போல் வீசவில்லை, ஏதோ வலைப்பயிற்சியில் வீசுவது போலவும் காட்சிப் போட்டியில் வீசுவது போலவும் படுமட்டமாக வீசினர். ஷார்ட் பிட்ச்களை அள்ளி வழங்கினர்.
ஷர்ஜீல் கான் ஒன்றும் கிறிஸ் கெய்லோ, சேவாகோ அல்ல, அவர் அறிமுக போட்டியில் 61 ரன்களை அதிவேகமாக அடித்தார், ஆனால் அதன் பிறகு சோபிக்க முடியவில்லை 11 போட்டிகளுக்குப் பிறகு நீக்கப்பட்டார். அவரது சராசரியும் 17.63தான். ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீகில் ஷான் டெய்ட், வஹாப் ரியாஸ் ஆகியோர் பந்து வீச்சுக்கு எதிராக 62 பந்துகளில் அடித்த சதம் அவரை டி20 அணிக்கு அழைத்தது. உலகக்கோப்பை டி20 போட்டிகளில் சுமாராக ஆடினார் ஷர்ஜீல் கான். அயர்லாந்தின் மட்டமான பந்து வீச்சு, வீழ்ச்சியடைந்த பீல்டிங்கில் இவரது அதிரடி அவருக்கு மேலும் கடினமான அணிகளை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை அளிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.