

ஜம்மு காஷ்மீரின் சிறந்த கால்பந்து பயிற்சியாளரும், வருங்காலத்தில் சர்வதேச கால்பந்து போட்டியில் ஆடும் கனவும் கொண்டிருக்கும் 21 வயது அப்ஷன் ஆஷிக் ஜம்மு காஷ்மீரில் போலீஸாருக்கு எதிராக கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டார்.
கடந்த ஏப்ரலில் ஒருநாள் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கடும் கோபாவேசம் கொண்ட இளைஞர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பொதுவாகவே அமைதியாக இருக்கும் அப்ஷன் ஆஷிக் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் உள்ளது. பாதுகாப்பு படையினர் மீது ஆஷிக் கல்வீசித் தாக்குதல் நடத்தியது அங்கு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இவர் ஏன் கல்லெறி தாக்குதலில் ஈடுபட்டார் என்பது பற்றி ‘தி ஸ்க்ரால்’ பத்திரிகை அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாட்டியாலாவின் பிரபல நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸில் பயிற்சி பெற்றவர் அப்ஷன் ஆஷிக், இவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கால்பந்துக்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதாகவே அனைவராலும் பார்க்கப்பட்டார். இவர் பயிற்சியளித்த அணி கடந்த ஆண்டு சிலபல வெற்றிகளைக் குவித்ததையும் இவருடன் பணியாற்றியதையும் மாணவிகள் பலர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இவரது கண்பார்வையில் ஸ்ரீநகரில் நிறைய வன்முறைகள், கல்லெறி சம்பவங்கள், பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களை நடந்தாலும் இவர் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்துள்ளார்.
அன்றைய தினம் நடந்தது என்ன?
ஏப்ரல் 24-ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கு வன்முறைச் சம்பவங்களால் தீப்பற்றி எரிந்தது. அன்றைய தினம் மதியம் அரசு பெண்கள் மேநிலைப் பள்ளியின் 10-16 பெண்களை ஆஷிக் பாதுகாப்பாக வழக்கமான ஒரு 15 நிமிட நடைப்பயிற்சிக்காக கோதி பாக் அருகே அழைத்துச் சென்றார். அப்போது போலீஸாருக்கு எதிராக கல்வீச்சு நடந்து கொண்டிருந்தது.
இதனைக் கண்ட ஆஷிக் தன் உடன் வந்த மாணவிகளை அழைத்துக் கொண்டு மாற்றுப்பாதையில் சென்றார். காஷ்மீர் போலீஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை வீசி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
ஆஷிக் உடன் வந்த மாணவிகளை போராட்டக்காரர்கள் என்று நினைத்தோ என்னவோ போலீஸார் இவர்களை நிறுத்தி விசாரிக்காமல் நேரடியாக வசையில் இறங்கியுள்ளார், இதில் கோபமடைந்த மாணவி போலீஸாரை எதிர்த்தார், இதற்காக அந்தப் போலீஸ் மாணவியை அடித்துள்ளார். இதற்கு மற்ற மாணவிகளும் ஆஷிக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் போலீஸார் மேலும் மேலும் அவர்களை கடுமையான வார்த்தைகளால் வசைபாடியபடியே இருந்துள்ளனர். இதனையடுத்து வீதிப் போராட்டத்தில் இந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆஷிக் முடிவெடுக்க முடியாமல் இரண்டக நிலைக்குத் தள்ளப்பட்டார். ஸ்க்ரால் செய்தியின் படி ஆஷிக் போலீசிடம், “நீங்கள் சீருடையில் இருப்பதால் உங்களை அடிக்க முடியவில்லை. ஆனால் உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று காட்டுகிறோம்” என்று கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்தே மேலும் வசைகள் அதிகரிக்க கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டார் வீராங்கனை ஆஷிக். விளையாட்டை அமைதிக்கான மார்க்கமாகக் காண்பதாகக் கூறும் ஆஷிக்கை கல்லெறி சம்பவத்துக்கு தூண்டியது போலீஸாரின் செயல்பாடுகளே என்கிறார் அவர்.