Published : 25 Feb 2017 03:56 PM
Last Updated : 25 Feb 2017 03:56 PM

மீண்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி

புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

குழிபிட்ச் போடுதலின் ‘பயனை’ இந்தியா அடைந்தது! புனே டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸிலும் 107 ரன்களுக்குச் சுருண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 333 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்டது.

முதல் இன்னிங்சில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 11 ரன்களில் இந்தியாவை 7 விக்கெட்டுகளை இழக்கச் செய்த இடது கை ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஓகீஃப் 2-வது இன்னிங்ஸிலும் அதே 35 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த டெஸ்ட் போட்டியில் 28.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நேதன் லயன் இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 441 ரன்கள் இமாலய இலக்கை எதிர்த்து சற்று முன் 34 ஓவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணி 107 ரன்களுக்குச் சுருண்டது.

நியுசவுத்வேல்ஸைச் சேர்ந்த 3 பேர் இந்த வெற்றிக்கு வித்திட்டனர். மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் புஜாரா, கோலியை வீழ்த்தி அரைசதம் எடுத்து இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்கள் பங்களிப்பு செய்தார், இந்த டெஸ்டின் ஹீரோ ஸ்டீவ் ஓகீஃப், இவரும் நியுசவுத் வேல்ஸைச் சேர்ந்தவர், மிக முக்கியமாக கேப்டன் ஸ்மித் அருமையான சதத்துடன் நியூசவுத்வேல்ஸ் பங்களிப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்திய அணி மொத்தம் இந்த டெஸ்ட் போட்டியில் 74 ஓவர்களையே சந்தித்து 212 ரன்களை மட்டுமே எடுத்தது. மாறாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் எடுத்த 27 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பீல்டர்கள் விட்ட கேட்ச்களின் உறுதுணையுடன் அருமையான உத்தியைக் கடைபிடித்து 109 ரன்களை அடித்தார். மிகவும் அற்புதமான பேட்டிங் ஆகும் இது, இந்தப் பிட்சில் சதம் எடுப்பதெல்லாம் சுலபம் கிடையாது. மேலும் இந்திய வீரர்கள் பந்தின் லைனைக் கணித்து ஆடாமல் பந்து ஸ்பின் ஆகும் என்று எதிர்பார்த்து உள்ளே வரும் பந்தில் அவுட் ஆகி வெளியேறினர். இந்தப் பிட்சில் இந்திய பேட்ஸ்மென்கள் தவறான கணிப்பினால் அவுட் ஆகினர் என்று கூறுவதற்கில்லை, இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒட்டுமொத்த அணுகுமுறையுமே தவறு.

ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்த பிறகு, 441 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்திய அணி உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறங்கியது.

இந்திய அணியின் பேட்டிங்கில் சிறு முன்னேற்றம் என்னவெனில் முதல் இன்னிங்சில் 11 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்தது, 2-வது இன்னிங்ஸில் 30 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்தது.

ஆட்டமிழந்து ரிவியூக்களையும் காலி செய்த விஜய், ராகுல்:

ஆட்டத்தின் 5-வது ஓவரை ஓகீஃப் வீச பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார் முரளி விஜய் ஆனால் அது வேகமாக, பிளாட்டாக நேராக வந்த பந்து, பந்தின் லைனுக்கு ஆடாமல் திரும்பும் என்று எதிர்பார்த்து ஆடியதால் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். எல்.பி.ஆனது விஷயமல்ல, நேராக காலில் வாங்கிவிட்டு ரிவியூ சென்று ஒரு ரிவியூவை விரயம் செய்தார்.

இதற்கு ஒரு ஓவர் சென்று, ராகுல் 10 ரன்களில், லயன் வீசிய பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி உள்ளே திரும்பியது, முன்னால் வந்து ஆடியிருந்தால் கால்காப்பில் வாங்கியிருந்தாலும் நடுவருக்கு சந்தேகம் வந்திருக்கும் அவுட் கொடுக்காமல் கூட போயிருக்கலாம், அனால் நன்றாகப் பின்னால் சென்று பந்தைக் கடைசி வரை பார்த்து கடைசியில் கால்காப்பில் வாங்க எல்.பி.ஆனார். சரி! இவ்வளவு தவறையும் செய்து விட்டு ஏதோ தவறே செய்யாதது போலவும் நடுவர் தவறாக அவுட் கொடுத்தது போலவும் ரிவியூ கேட்டார். நடுவரின் தீர்ப்பு ஏற்கப்பட்டது, மொத்தம் 2 ரிவியூக்களையும் முக்கியமான ஒரு இன்னிங்சில் விரயம் செய்த 2-வது பெருமையைத் தேடிக்கொண்டார் ராகுல்.

விராட் கோலியின் தவறான அணுகுமுறை:

விராட் கோலி களமிறங்கி 37 பந்துகள் ஆடி 1 பவுண்டரியுடன் ஆடினார், ஓரிரு பந்துகளை திரும்பும் என்று நினைத்து பொறியில் சிக்குவதற்கான சுவட்டைக் காட்டினார். ஓகீஃபின் ஒரு ஆஃப் ஸ்டம்ப் நேர் பந்து கோலியின் பேடைத் தாக்கியது ஒரு பெரிய முறையீடு ஆனால் ஸ்மித் ரிவியூ செய்யவில்லை, ஒருவேளை ஸ்மித் ரிவியூ கேட்டிருந்தால் அது அவுட் ஆகியிருக்கும் ஏனெனில் முதலில் கால்காப்பில்தான் வாங்கினார், பந்து ஸ்டம்புக்கு நேரான பந்து. தப்பினார் கோலி.

பிறகு ஒரு ஓகீஃப் பந்தை எட்ஜ் செய்தார் அது ஸ்லிப்பில் முன்னால் விழுந்தது. ஒரு அருமையான ராஜகவர் டிரைவ் பவுண்டரிக்குப் பிறகே, ஓகீஃப் ரவுண்ட் தவிக்கெட்டில் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் செய்து லேசாக உள்ளே வரும் கோணத்தில் வீசினார், கோலி பந்து திரும்பும் என்று எதிர்பார்த்து பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் திரும்பவில்லை ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது, இந்தப் பிட்சில் எப்படி ஆடக்கூடாது என்பதற்கு உதாரணமாக அமைந்தது கோலியின் பேட்டிங்.

47/3 என்ற நிலையில் புஜாரா, ரஹானே இணைந்து ஸ்கோரை 77 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 3 அருமையான பவுண்டரிகளுடன் ரஹானே 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஓகீஃபின் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகி ரஹானேயை ஆட அழைத்தது, ஆனால் இந்த பிட்சில் பந்து அதுவாகவே நேராக வராது, கொஞ்சம் நின்று வந்தது, ரஹானே தனது ஸ்ட்ரோக்கைக் கட்டுப்படுத்தவில்லை கவரில் கேட்ச் ஆனது.

ரவிச்சந்திரன் அஸ்வினும் ஓகீஃபின் பிளாட் டெலிவரிக்கு கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். இம்முறை ஸ்மித் ரிவியூ செய்தார். விருத்திமான் சஹாவுக்கும் ஒரு பந்தை ஓகீஃப் சறுக்கிக் கொண்டு நேராக செல்லுமாறு வீச கால்காப்பில் வாங்கினார். 5 ரன்களில் வெளியேறினார். இதோடு தேநீர் இடைவேளை, இந்திய அணி 99/6.

இதே ஓவரில் புஜாரா 31 ரன்களில் ஓகீஃபின் அதே பந்துக்கு எல்.பி.ஆனார். மீண்டும் பந்தைத் திருப்ப முயற்சி செய்யாமல் ஆர்ம் பால் வீசினா ஓகீஃப் இதுவும் வேகமாக சறுக்கிக் கொண்டு சென்று புஜாராவின் கால்காப்பைத் தாக்கியது. மீண்டும் பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தனர் ஆனால் ஓகீஃப் திருப்ப முயற்சி செய்யவில்லை. ஓகீஃப் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜா லயன் பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இசாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ் ஆகியோரும் லயனிடம் ஆட்டமிழக்க 33.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு இந்தியா சுருண்டு 333 ரன்களில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

மொத்தத்தில் இந்திய அணியை சகலதுறைகளிலும் தோற்கடித்தது ஆஸ்திரேலியா, ஆட்ட நாயகனாக ஓகீஃப் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் உத்வேகத்தை ஆஸ்திரேலியாவிடமிருந்து பறிப்பது கடினம், இனிமேல்தான் ஆஸ்திரேலிய அணி மேலும் அபாயகரமானது, கோலி தலைமையில் இந்திய அணிக்கு உண்மையான அக்னிப்பரிட்சை இந்தத் தொடர்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x