Published : 03 Jun 2017 03:23 PM
Last Updated : 03 Jun 2017 03:23 PM

தப்பித்தது அதிர்ஷ்டம்தான் என்றாலும் மிக மோசமாக பந்து வீசினோம்: ஆஸி. கேப்டன் ஸ்மித் ஒப்புதல்

மழை காரணமாக நியூஸிலாந்திடம் தோல்வியடைவதிலிருந்து தப்பியதற்கு ஆஸி.கேப்டன் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்தாலும், தங்கள் அணி படுமோசமாக பந்து வீசியது என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மழையினால் தப்பித்தது அதிர்ஷ்டம் என்றாலும் பந்து வீச்சு படுமோசம் என்பதை ஸ்மித் ஒப்புக் கொண்டார்.

வார்னர், பிஞ்ச், ஹென்ரிக்ஸ் ஆகியோர் விக்கெட்டை இழந்து 235 ரன்கள் இலக்கை விரட்டும் போது மழை ஆஸ்திரேலியா சொதப்பிய தருணத்தில் மழை காப்பற்றியது. இரு அணிகளும் புள்ளிகளை பிரித்துக் கொண்டன.

நடுநிலை மைதானங்களில் இதற்கு முன்னர் 18 முறை ஆஸி.-நியூஸி. அணிகள் மோதியதில் ஆஸ்திரேலியா 17 முறை வெற்றி பெற்றுள்ளது, நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மழையினால் ஆஸ்திரேலியா தப்பித்தது.

இந்நிலையில் ஆஸி. கேப்டன் ஸ்மித் கூறியதாவது:

நீண்ட நாட்களுக்குப் பிறகு படுமோசமாக பந்து வீசினோம் என்றே கருதுகிறேன். நிறைய பவுண்டரி பந்துகளை நியூஸிலாந்துக்கு வாரி வழங்கினோம். மிகவும் சாதாரணமான பந்து வீச்சாக அமைந்தது. ஆட்டம் முடிந்த போது நியூஸிலாந்து நிலையில் நாங்கள் இருந்திருக்கலாம் என்று நினைத்தோம். நியூஸிலாந்திடம் தரமான பந்து வீச்சு உள்ளது. இன்னும் நாங்கள் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது.

மிகவும் சாதாரணமான ஆட்டத்தை ஆடி விட்டோம் அது நேற்றோடு தொலையட்டும் என்றே நான் விரும்புகிறேன். நியூஸிலாந்து அணிக்குப் பாராட்டுகள். அவர்கள் எங்களை ஆதிக்கம் செலுத்தினார்கள். கேன் வில்லியம்சன் தன் இன்னிங்ஸை எங்களுக்கு எதிராக சரியான நேரத்தில் ஆடினார். மிகவும் சிறப்பாக ஆடினார் கேன்.

நிச்சயம் ஆட்டம் மழையால் பாதிக்கப்படுவது நல்லதல்ல. இனி என்ன ஒவ்வொரு போட்டியுமே எங்களுக்கு இறுதிப் போட்டிதான். இது விரைவு கதியில் செல்லும் தொடராகும் இதில் வாஷ் அவுட், தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு கூறினார் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x