Published : 26 Oct 2014 10:38 AM
Last Updated : 26 Oct 2014 10:38 AM

சிறுவனைக் கொன்று பீரோவில் மறைத்து வைத்த பெண் கைது: தவறான நடத்தையால் நடந்த விபரீதம்

வேலூரில் சலவைத் தொழிலாளியின் 3 வயது மகனை கொலை செய்து, சடலத்தை பீரோவில் மறைத்து வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் முத்துமண்டபம் டோபிகானா தெருவைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி முரளி(30). இவரது மனைவி சுமதி(26). இவர்களது 3 வயது மகன் தினேஷ் நேற்று முன்தினம் பிற்பகலில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அருகில் உள்ள வீடுகளில் பெற்றோர் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் முரளி, நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தார். அதன்பேரில், ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். முரளியின் வீட்டின் அருகில் விசாரணை நடத்தியபோது, முரளிக்கும் அவரது எதிர் வீட்டில் வசிக்கும் சுமதி (24) என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டாக பழக்கம் இருந்ததும், இதனால் முரளியின் மனைவிக்கும் சுமதிக்கும் தகராறு நடந்துள்ளதும் தெரியவந்தது.

சந்தேகத்தின்பேரில் முரளியின் எதிர்வீட்டு சுமதியைப் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சிறுவன் தினேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் கூறிய தகவலின்பேரில், அவரது வீட்டின் படுக்கை அறை பீரோவில் மறைத்து வைத்திருந்த தினேஷின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘சுமதியின் கணவர் பிரபு சென்னையில் பெயின்டராக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் தனியாக இருந்த சுமதிக்கும் எதிர் வீட்டில் வசித்த முரளிக்கும் இடையில் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களது பழக்கம் முரளியின் மனைவி சுமதிக்கு தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த சுமதி, பிரபுவின் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். முரளியின் மனைவி கவனத்தை திசை திருப்ப முடிவு செய்துள்ளார்.

இதற்காக தினேஷை கொலை செய்தால் சுமதி அமைதியாகிவிடுவார் என திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே இருந்த தினேஷை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற சுமதி, அவனது கை, கால்களை கட்டிப்போட்டு முகத்தில் தலையணை வைத்து மூச்சுத் திணறடித்து கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை பீரோவில் மறைத்துள்ளார்’’ என்றனர்.

இது தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரபுவின் மனைவி சுமதியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x