Last Updated : 05 Mar, 2014 10:52 AM

 

Published : 05 Mar 2014 10:52 AM
Last Updated : 05 Mar 2014 10:52 AM

புத்துயிர் பெறுகிறது சென்னை கால்பந்து

சென்னை கால்பந்து சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் கால்பந்து போட்டி புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது.

பாரம்பரியமிக்க சென்னை கால்பந்து சங்கம் 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடிய குணபாண்டியன், ஆர்லேன்டோ, செலஸ்டின், சபீர் பாஷா உள்ளிட்ட ஏராளமான முன்னணி வீரர்களை உருவாக்கிய பெருமை சென்னை கால்பந்து சங்கத்தையே சேரும்.

இந்திய கால்பந்து வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த இந்த சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக கோஷ்டி பூசல், குளறுபடிகள் என பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி சிதறுண்டது. இந்த சங்கத்துக்கு 2009-ல் தேர்தல் நடைபெற்ற நிலையில், 2010-ம் ஆண்டு மே மாதத்தில் தற்காலிக கமிட்டி நியமிக்கப்பட்டது. கடந்த வாரம் வரை இந்த தற்காலிக கமிட்டிதான் சென்னை கால்பந்து சங்கத்தை நிர்வகித்து வந்தது.

சென்னை லீக் உள்ளிட்ட எல்லா போட்டிகளும் பெயரளவிலேயே நடத்தப்பட்டதோடு, பரிசுத் தொகைகளும் பெரிய அளவில் இல்லை. கடமைக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளால் வீரர்களுக்கு எந்தவித பயனும் கிடைக்காமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கால்பந்து வீரர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக சென்னை கால்பந்து சங்கத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய தலைவராக வருண் திரிபுரனேனியும், செயலாளராக சுரேஷும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரவீண், மாதவன், காந்தி, துளசி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், சுப்பிரமணி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர புதிய செயற்குழு உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கால்பந்து ஆர்வலர்கள் என்பதால் இனி சென்னை கால்பந்து சங்கத்தின் செயல்பாடு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை தமிழக கால்பந்து வீரர்களிடையே ஏற்பட்டுள்ளது.

விரைவில் சென்னை லீக்

சென்னை கால்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள், இந்த ஆண்டு இதுவரை நடத்தப்படாமல் உள்ள சென்னை லீக் கால்பந்து போட்டிகளை உடனடியாக நடத்துவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக முதல் கட்டமாக சென்னை நேரு மைதானத்தை மார்ச் 27-ம் தேதி ஏப்ரல் இறுதி வரை பதிவு செய்துள்ளனர். நேரு மைதானத்தில் மட்டுமின்றி சென்னை நேரு பூங்காவிலும் சென்னை லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

சென்னை லீக் போட்டிகளுக்கான தேதிகள் வரும் சனிக்கிழமை இறுதி செய்யப்படவுள்ளன. சென்னை லீக் போட்டிக்கான பரிசுத் தொகையையும் உயர்த்த புதிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி சீனியர் டிவிசன் போட்டியில் சாம்பியனாகும் அணிக்கான பரிசுத் தொகை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.

பிரத்தியேக இணையதளம்

சென்னை கால்பந்து சங்கத்துக்கு என பிரத்தியேகமான இணையதளம் உருவாக்கப்படுகிறது. சென்னை கால்பந்து சங்கம் தொடர்பான முழு விவரங்கள், சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போட்டிகள், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள போட்டிகள், சென்னை லீக் போட்டிகள் குறித்த விவரங்கள் என அனைத்து தகவல்களையும் இந்த இணையதளத்தில் காணலாம்.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் 14 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோர் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கோடைகால பயிற்சி முகாமை நடத்த சென்னை கால்பந்து சங்கம் திட்டமிட்டுள்ளது. நடுவர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்துவதோடு, அகில இந்திய அளவிலான கால்பந்து போட்டியை நடத்தவும் புதிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

மருத்துவ காப்பீடு

சென்னை லீக் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை கால்பந்து சங்கத்தில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளும் கால்பந்து வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 96 கால்பந்து கிளப்புகளைச் சேர்ந்த சுமார் 2,000 வீரர்கள் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கால்பந்து சங்கத்துக்கு என்று தனியாக ஆம்புலன்ஸ் வாங்கவும், ஸ்பான்சர்களை பெற்று அனைத்து போட்டிகளையும் பிரம்மாண்ட அளவில் நடத்துவது குறித்தும் புதிய நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அனைவரும் பங்களிக்க வேண்டும்

இது தொடர்பாக சென்னை கால்பந்து சங்கத்தின் செயலாளர் சுரேஷிடம் கேட்டபோது, “கால்பந்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான நோக்கம். அதற்கு வீரர்கள், ஸ்பான்சர்கள், கிளப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், ஊடகங்கள், கால்பந்து ஆர்வலர்கள் என எல்லோருடைய பங்களிப்பும் தேவை. அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஓர் அங்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு இந்த சென்னை கால்பந்து சங்கத்துக்கு இருக்கிறது. வரும் நாள்களில் கால்பந்து போட்டி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்” என நம்புகிறோம் என்றார்.

யார் இந்த வருண்?

சென்னை யுனைடெட் எப்.சி. உள்ளிட்ட இரு கால்பந்து கிளப்புகளை நடத்தி வரும் வருண் திரிபுரனேனி, சமீபத்தில் ரூ.20 லட்சம் செலவில் பள்ளிகள் அளவிலான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளை நடத்தி அதில் வெற்றி கண்டுள்ளார். தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கு என்று தனியாக இணையதளம் கிடையாது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான பிரீமியர் லீக் போட்டியின் “ஹைலைட்ஸ்கள்” அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார் இந்த வருண். அதை இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x