

தோனி, சச்சின் உள்ளிட்ட அணித் தேர்வு விவகாரங்களை வெளிப்படையாக பேசிய சந்தீப் பாட்டீலுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் சமீபத்தில் தோனியை கேப்டன்சியிலிருந்து அகற்றுவது பற்றியும், சச்சின் டெண்டுல்கர் பற்றியும் கூறிய கருத்துகளுக்கு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது 2015 உலகக்கோப்பைக்கு முன்னதாக ‘தோனியின் பினிஷிங்’ பற்றியும் தோனியின் கேப்டன்சியைப் பறிப்பது பற்றியும் விவாதித்தோம் என்றும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்காவிட்டால் அணியிலிருந்து நீக்கவும் பரிசீலிக்கப்பட்டது என்று சந்தீப் பாட்டீல் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு உண்மையைப் போட்டு உடைத்தார்.
வழக்கம் போல், உண்மை வெளியானால் சில பிரிவினருக்கு அது சிக்கலை ஏற்படுத்தும், அதற்கேற்ப பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கூறும்போது, “நான் தெளிவாகக் கூறிவிடுகிறேன். முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல் இந்த விவகாரங்களையெல்லாம் கூறியிருக்கக் கூடாது. பதவியிலிருந்த போது இதே கேள்விகளுக்கு வேறு விதமாக பதில் அளித்த அவர், பதவிக்காலம் முடிந்த பிறகு இவ்வாறு கூறுவது நெறியாகாது.
இப்படிப்பட்ட நெறிமுறையற்ற, விரும்பத்தகாத கருத்துகளை ஒருவர் வெளியிடக்கூடாது. ஏனெனில் ஒரு அணித் தேர்வுக்குழு தலைவராக அவர் மீது நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரும் நிறைய கிரிக்கெட் ஆடியுள்ளார். அவருடன் 4 தேர்வுக்குழு உறுப்பினர்கள் இருந்தனர், அவர்கள் ஏதாவது கூறினார்களா? எனவே சந்தீப் இதனைத் தவிர்த்திருக்க வேண்டும்.” என்றார் அனுராக் தாக்குர்.