

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், ரபேல் நடால் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் மார்ட்டினா ஹிங்கிஸ், லியாண்டர் பயஸ் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நடால், 6-ம் நிலை வீரரான பிரான்சின் கெல் மோன்பில்சுடன் மோதினார்.
2 மணி நேரம் 55 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச்சை 2-வது சுற்றிலேயே வெளியேற்றிய உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்தோமின் தனது 4-வது சுற்றில் 15-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார்.
அகுட் தோல்வி
இதில் டிமிட்ரோட் 2-6, 7-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று கால் இறுதியில் கால்பதித்தார். மற்றொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் டொமினிக் தியம் 7-5, 6-7, 2-6, 2-6 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபினிடம் தோல்வியடைந்தார்.
3-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயயோனிக் தனது 4-வது சுற்றில் சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற 13-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுதிஸ்டா அகுட்டை எதிர்த்து விளையாடினார். இதில் 7-6, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக் கில் ரயயோனிக் வெற்றி பெற்றார்.
செரீனா அசத்தல்
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் 16-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் 22-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலி யாவின் தரியா கவ்ரிலோவாவை யும், 9-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹொன்டா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் 30-ம் நிலை வீராங்கனை யான ரஷ்யாவின் கேத்ரினா மகரோவாவையும் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தனர்.
பயஸ் ஜோடி
கலப்பு இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் கேஸே டெல்அக்குவா, மேட் ரெய்ட் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.
ஜூனியர் மகளிர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஜீல் தேசாய், ஜெர்மனியின் ஜூலி நெய்மியரை எதிர்த்து விளையாடி னார். இதில் ஜீல் தேசாய் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றிப் பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார்.