

டென்னிஸ் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாக பிபிசி, பஸ்பீட் நிறுவனங்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயர்களை வெளியிட டென்னிஸ் நட்சத்திரங்கள் வலியுறுத்தினர்.
கடந்த 10 ஆண்டுகளாக முதல் 50 இடங்களுக்குள் உள்ள 16 டென்னிஸ் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. அவர்களில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சிலரும் உண்டு. இதுதொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பிபிசி, பஸ்பீட் நிறுவனங்கள் நேற்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த 16 வீரர்களில் பாதிப்பேர், கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் உட்பட தற்போது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இருப்பதாக அந்த அறிக்கை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டது.
இதனையடுத்து, டென்னிஸ் ரசிகர்களுக்கும் உலகிற்கும் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் விவரம் தெரிய வேண்டும் என்று முன்னணி டென்னிஸ் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மார்டினா நவ்ரதிலோவா தனது ட்விட்டரில், “நமக்குத் தேவை உண்மை, அனுமானங்கள் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
டென்னிஸ் வீராங்கனை மேரி ஜோ பெர்னாண்டஸ் கூறும்போது, “உலகமே டென்னிஸ் போட்டிகளை பார்த்து கொண்டிருக்கும் போது இது குறித்து ஏதாவது செய்தாக வேண்டும், உலகிற்கு அத்தகைய வீரர்களை அடையாளம் காட்டுவது அவசியம்.
ரோஜர் பெடரர் கூறும் போது, “யார் அந்த வீரர்கள்? பெயர்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். (முன்னாள் கிராண்ட் ஸ்லாம் வின்னர்) ஒரு வீரரைக் குறிப்பிட்டுள்ளனர், யார் அவர்? அவர் வீரர்தானா, அல்லது வேறு யார்? இது முன்னால் நடந்ததா? இரட்டையர் வீரரா? ஒற்றையர் வீரரா? எந்த கிராண்ட் ஸ்லாம்? எனவே நிறைய கேள்விகள் உள்ளன. ஊகத்துக்கு பதில் அளிப்பது அர்த்தமற்றதாகும்.” என்று அன்று மேட்ச் முடிந்தவுடன் கூறினார் பெடரர்.
டென்னிஸில் சூதாட்டம் என்பது போட்டியையே தோற்பதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், சர்வீசில் டபுள் பால்ட் செய்வது, அல்லது ஒரு செட்டை இழக்க முன் பேரம் பேசுவது என்பதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் மேட்ச்-பிக்சிங் என்பது நிரூபிக்கக் கடினமான ஒன்றுதான் என்று விசாரணை நிபுணர்களும் கூறுகின்றனர்.
முன்னாள் வீராங்கனை கிறிஸ் எவர்ட் லாய்ட் கூறும்போது, "இந்தச் செய்தியை கேள்விப்பட்டவுடன் கடந்த சில தினங்களாக நான் வருத்தத்தில் இருக்கிறேன். எங்கள் ஆட்டத்தின் நேர்மை பற்றி டென்னிஸ் வீரர்களான எங்களுக்கு மிகப்பெரிய பெருமை உண்டு” என்றார்.
ஒரு போட்டியில் தோல்வியடைய நோவக் ஜோகோவிச்சிடம் பண பேரம் நடத்தியதாக அவரே தெரிவித்தார். 2007-ல் ரஷ்யாவில் இது நடந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் தான் அதனை கடுமையாகக் கண்டித்து நிராகரித்ததாக அவர் கடந்த வாரம் தெரிவித்தார்.
ஆண்டி ரோடிக் என்ற முன்னாள் வீரரும் உண்மையென்றால் பெயர்களை வெளியிடுவது அவசியம் என்று தெரிவித்தார்.