

ஐந்து டெஸ்டுகள் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து மூன்றாவது டெஸ்டிலும் வென்றுள்ள ஆஸி.. இதன் மூலம் ஆஷஸ் தொடரை வென்றது.
251 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் 5ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, வெற்றி பெற மேலும் 253 ரன்கள் தேவையாயிருந்தது. அந்த அணியின் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது 332 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த மூன்றாவது ஓவரிலேயே ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். அதற்கடுத்து இங்கிலாந்து அணியால் 5 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. ஜான்ஸன் பந்தில் ஆண்டர்சன் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து வசம் இருந்த ஆஷஸ் கோப்பையை ஆஸி. மீட்டது. முதல் இன்னிங்க்ஸில் சதமடித்த ஆஸி.யின் ஸ்டீவன் ஸ்மித், ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, டாஸை வென்று முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 385 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தனர். இதனால் 369 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஆஸி. டிக்ளேர் செய்தது. 504 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்குடன் ஆடிய இங்கிலாந்து, முதல் இன்னிங்க்ஸைப் போன்றே இரண்டாவது இன்னிங்க்ஸிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் டெஸ்ட்டை 381 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்ட்டை 218 ரன்கள் வித்தியாசத்திலும் வென்ற ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட்டில் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
ஆஷஸ் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் இங்கிலாந்து அணியே வெல்லும் என பலர் கணித்தனர். அடுத்தடுத்து பல தோல்விகளைச் சந்தித்ததன் தொடர்ச்சியாகவே ஆஸி. அணியும் களமிறங்கியது. ஆனால் அணியின் பயிற்சியாளர் லீமேனின் முயற்சியால் சரிவிலிருந்து மீண்ட ஆஸ்திரேலியா இப்போது கோப்பையை வென்றுள்ளது. அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமாய் இருந்துள்ளது. கிளார்க், ஹேடின், வார்னர், ஸ்மித் என பேட்ஸ்மேன்களும் உரிய நேரத்தில் கை கொடுத்து அணியின் வெற்றிக்குக் காரணமாய் இருந்துள்ளனர்.
இங்கிலாந்து அணியிலோ ப்ராட், ஆண்டர்ஸன், ஸ்வான் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களே அவ்வபோது சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பேட்ஸ்மேன்களின் ஆட்டம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. மூன்றாவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் அடித்த சதம் தான் இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் அடிக்கும் முதல் சதம். இந்த பரிதாபகரமான நிலையிலிருந்து மீண்டு, மீதமுள்ள இரண்டு டெஸ்டிலாவது இங்கிலாந்து வெற்றி பெற்று மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இங்கிலாந்து ரசிகர்களின் விருப்பம்.
நான்காவது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.