Last Updated : 20 Sep, 2016 09:22 AM

 

Published : 20 Sep 2016 09:22 AM
Last Updated : 20 Sep 2016 09:22 AM

500-வது டெஸ்டில் கால்பதிக்கும் இந்திய அணி: சி.கே.நாயுடு முதல் விராட் கோலி வரை ஓர் அலசல்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வரும் 22-ம் தேதி கான்பூர் கீரின்பார்க் மைதா னத்தில் டெஸ்ட் போட்டியில் விளை யாட உள்ளது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டி. 1932-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக் கெட்டில் பங்கேற்க ஆரம்பித்த இந்தியா 84 வருட கிரிக்கெட் பயணத் தில் உச்சங்களையும் தொட்டது. அதேவேளையில் அதளபாதாளத் திலும் விழுந்தது. அதுபற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

அறிமுக போட்டி

1932 -ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக சி.கே.நாயுடு தலைமையில் டெஸ்டில் காலடி எடுத்துவைத்தது இந்திய அணி. கிரிக்கெட்டின் சொர்க்கபுரியாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி 3 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டது.

இந்த ஆட்டத்தில் இந்தியா 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த ஆட்டத்தின் இரு இன்னிங்ஸிலும் இந்திய வீரர்கள் ஒருவர் கூட பவுண்டரி அடிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு சிக்ஸர் அடித்திருந்தது. இதை 9-வது வீரராக களமிறங்கிய ரிச்சர்டு பிரவுன் அடித்திருந்தார்.

துரத்திய தோல்விகள்

1932-1946-ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியுடன் மட்டும் தான் இந்தியா டெஸ்ட் போட்டி களில் விளையாடிக் கொண்டி ருந்தது. இந்த 14 ஆண்டு கால இடைவெளியில் இரு அணிகள் இடையே 10 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை.

1947-48-ம் ஆண்டு முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-0 என இழந்தது. 1948 - 49-ம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு ஆட்டங்கள் டிரா ஆனது. சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற அந்த தொடரிலும் வேதனையே ஏற்பட்டது.

முதல் வெற்றிக் கனி

20 ஆண்டுகள் கழித்து தான் இந்தியா முதல் வெற்றிக் கனியை பறித்தது. 1952-ல் ஹஸாரே தலைமையில் இந்தியா தனது 25-வது டெஸ்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இந்தியா சார்பில் பங்கஜ் ராய், பாலி உமரிக்கர் இருவரும் சதம் அடித்தார்கள். வினூ மங்கட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் முதல் வெற்றி சென்னையில் அமைந்தது என்பது வரலாற்றுச் சிறப்பு.

ஏற்ற, இறக்கங்கள்

முதல் வெற்றிக்கு பின்னர்தான் இந்திய அணியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. 1952 -1956 வரையிலான காலக்கட்டத்தில் 20 போட்டிகளில் இரண்டில் மட்டும் தோற்றது இந்திய அணி. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் 16 போட்டிகளில் 12 தோல்விகளை இந்திய அணி சந்தித்தது.

இதையடுத்து 1959-1961 வரை யிலான காலகட்டத்தில் விளை யாடிய 14 டெஸ்ட் போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. இந்த சீசனில் தொடர்ச் சியாக ஒன்பது போட்டிகளை இந்திய அணி டிரா செய்தது. இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப் படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் ஆதிக்கம்

டெஸ்ட் உலகில் இந்தியாவை வெல்வது கடினம் என்ற சூழ் நிலை உருவாகிய நிலையில் மேற்கிந்தியத் தீவுகளின் வடிவில் ஆபத்து வந்தது. மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடிய இந்திய அணி 5 ஆட்டத்திலும் படுதோல்வி களை சந்தித்தது. இந்த தொடர் முடிந்த வேகத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த மேற்கிந் தியத் தீவுகள் அணி சொந்த மண்ணிலும் இந்திய அணியை அலறவைத்தது. இந்த வெற்றி களுக்கு பின்னர் கால் நூற்றாண்டு களுகு மேற்கிந்தியத் தீவுகளின் ராஜ்ஜியம் தொடர்ந்தது.

சுழல் மாயாவிகள்

1962-1883 காலக்கட்டங்களில் இந்திய அணி சுழற்பந்து வீச்சால் இந்திய துணைக்கண்ட போட்டி களில் எதிரணியை சுழலால் மிரட்டியது. பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர், எரிப்பாலி பிரசன்னா, ஸ்ரீநிவாஸ் வெங்கட் ராகவன் ஆகியோர் சுழலில் மாயாஜாலம் காட்டினர். இவர்கள் நால்வரும் இணைந்து 231 போட்டி களில் மொத்தம் 853 விக்கெட்கள் சாய்த்தனர்.

கவாஸ்கர், கபில் தேவ்

1971-ல் போர்ட் ஆப் ஸ்பெயினில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடிக்க இந்தியா வெற்றி பெற்றது. கவாஸ்கரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மொஹிந்தர் அமர்நாத், கபில்தேவ், ரவி சாஸ்திரி, பி.எஸ்.சந்து, வெங்சர்க்கார், கிர்மானி என நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள்.

1983 உலகக்கோப்பையை இந்தியா வென்றதும், இந்திய ரசிகர் களை கிரிக்கெட் ஆட்கொண்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் ரேடியோ வர்ணனையில் கேட்ட ரசிகனின் காதுகளில் கிரிக்கெட் நாமம் புகுந்தது.

சேப்பாக்கத்தில் ‘டை'

1986-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா-ஆஸ்தி ரேலியா அணிகள் முதல் டெஸ்டில் மோதின. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 574 ரன்கள் குவித்தது. ஆஸி. கேப்டன் டீன் ஜோன்ஸ் இரட்டைச் சதமும், ஆலன் பார்டர், டேவிட் பூன் சதமும் விளாசினர்.

இந்திய அணியில் காந்த், ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன் அரை சதம் அடிக்க, கபில்தேவ் அதிரடியாக சதம் விளாசினார். இதனால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது மட்டுமில்லாமல் 397 ரன்களையும் குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 170 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 347 ரன்கள் எடுத்தது. இதனால் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி டை ஆனது.

உலக நாயகன்

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை தலை நிமிர வைத்ததில் சச்சின் டெண்டுல்கருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு சேர்த்தார் சச்சின். 1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். 16 வயதிலேயே புயலாக உருவெடுத்த சச்சின் சுழன்றடித்ததில் சாயாத பந்து வீச்சாளர்களே இல்லை.

எழுச்சி நாயகன்

கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணியை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச்சென்றார். 2000-2007 வரை சேவக், டிராவிட், லட்சுமணன், சச்சின், ஹர்பஜன் சிங், கும்ப்ளே என விளையாடும் லெவனில் நட்சத்திர பட்டாளமே இருந்தது. பேட்டிங்கில் சச்சின், கங்குலி, டிராவிட் லட்சுமண் ஆகியோரை கொண்ட நால்வர் கூட்டணி எதிரணிக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்தது.

2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் இன்ற ளவும் வரலாற்றின் சிறந்த டெஸ்ட் போட்டியாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சேவக் அடுத் தடுத்து அடித்த முச்சதம் பிரமிக்க வைத்தது.

பொற்காலம்

2007-2011 வரையிலான காலக் கட்டம் இந்திய அணிக்கு பொற்காலம். கங்குலியால் விதைக்கப்பட்ட இந்திய அணி வெற்றியை அறுவடை செய்தது. டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியது. உலகின் அத்தனை அணிகளையும் இந்தியா மிரள வைத்தது. இந்த காலக்கட்டத்தில் 47 போட்டிகளில் 22-ல் வெற்றி பெற்று வரலாறு படைத்தது இந்திய அணி.

2011-ம் ஆண்டு மத்தியில் இருந்து 2015 வரை இந்திய அணி கடும் சரிவை கண்டது. ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற தோனிக்கு சோதனையாக அமைந்தது. இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பெரும் உதை வாங்கியது. தொடர் தோல்விகளால் 2014-ம் ஆண்டு தோனி திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதுவும் ஆஸ்திரேலிய பயணத்தின் கடைசி கட்டத்தில். நட்டாற்றில் விட்ட கதையாக அணியை கையில் எடுத்தார் விராட் கோலி.

இளம் வீரர்களின் எழுச்சி

விராட் கோலியின் தலை மையில் முற்றிலும் மாறுபட்ட வியூகங்களுடன் வெற்றிகளை வசப்படுத்தி வருகிறது இந்திய அணி. கங்குலி உருவாக்கிய அணி யில் எப்படி ஒரு வெற்றி வேட்கை இருந்ததோ, அதனை தற்போது காணமுடிகிறது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது.

கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி, ஆறு போட்டியில் வெற்றி என நேர்மறையாக இருக்கிறது இந்திய அணி. வெற்றி ஒன்றுதான் இலக்கு, அதுவே பிரதான நோக்கமாக கொண்டு அணியை வழிநடத்தும் விராட் கோலியிடம் இருந்து இன்னும் அதிக வெற்றிகள் கிடைக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x