இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைய இந்திய அணி தீவிரம்: ஆட்டத்தில் மழை குறுக்கிடும் என எச்சரிக்கை

இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைய இந்திய அணி தீவிரம்: ஆட்டத்தில் மழை குறுக்கிடும் என எச்சரிக்கை
Updated on
3 min read

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடக்கும் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இந்தியா ஆடுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் எண்ணத்தில் இந்தியா தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் இன்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ் தான் அணியை 124 ரன்கள் வித்தி யாசத்தில் அபாரமாக வென்றது. அதே நேரத்தில் இலங்கை அணி, தென் ஆப்ரிக்க அணியிடம் 96 ரன்களில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மதியம் 3 மணிக்கு மோதுகின்றன.

இந்த இரு அணிகளின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்த்தால் இந்திய அணிக்கு இலங்கை அணி எந்த விதத்திலும் சமமாக இல்லை என்றே கூறலாம். தொடரை வெல்ல வாய்ப் புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா கருதப்படும் நிலையில் அரை யிறுதி வாய்ப்பைக்கூட எட்ட வாய்ப் பில்லாத ஒரு சாதாரண அணி யாகவே இலங்கை கருதப்படுகிறது.

பேட்டிங் வரிசை

முதல் ஆட்டத்தில் பாகிஸ் தானை வென்ற பிறகு அதீத தன்னம்பிக்கையுடன் இந்திய அணி, இப்போட்டியை எதிர் கொள்கிறது. இந்தியாவின் இந்த தன்னம்பிக்கைக்கு அதன் வலுவான பேட்டிங் வரிசையே முக்கிய காரணமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி யில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங் என்று இந்தியாவின் முதல் 4 பேட்ஸ் மேன்களும் அரை சதம் அடித்துள் ளது மற்ற நாடுகளை உலுக்கி யுள்ளது. இது போதாதென்று ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் எதிராளிகளை சூறாவளியாத் தாக்க தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், ஜடேஜா ஆகியோரும் தயாராக உள்ளனர்.

பேட்டிங் வரிசையைப் போன்றே இந்தியாவின் பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளனர். முன்பெல்லாம் ஓரிரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கவே இந்திய அணி திணறி வந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா என்று 5 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை மிரட்ட காத்திருக்கிறார்கள். இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இந்த பந்துவீச்சு வரிசையே போதுமானது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது போதாதென்று அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சும் எதிரணியைத் தாக்க தயாராக உள்ளது.

மலிங்காவை நம்பும் இலங்கை

அதே நேரத்தில் இலங்கை அணியோ பேட்டிங், பந்துவீச்சு ஆகிய 2 பிரிவுகளிலும் பலவீன மாக உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரை அந்த அணி மலிங்காவையே பெரிதும் நம்பியுள்ளது. மற்ற பந்துவீச்சாளர்களால் போதிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.

சங்ககாரா, ஜெயவர்த்தனே ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களுக்கு மாற்றாக சிறந்த பேட்ஸ்மேன்களை களமிறக்க இலங்கை அணி திணறி வருகிறது. டிக்வெல்லா, மேத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோரையே அந்த அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பியுள்ளது. இலங்கையின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான உபுல் தரங்காவுக்கு 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளதும் அந்த அணியை பாதித்துள்ளது.

தோனிக்கு பயிற்சி

தன்னை விட பலம் குறைந்த அணியாக இருந்தாலும் இந்திய அணி இலங்கையை குறைத்து மதிப்பிட தயாராக இல்லை. இன்றைய போட்டியில் தோற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்க இந்திய அணி நிச்சயம் போராடும். மேலும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக, தோனிக்கு பேட்டிங் பயிற்சி தேவைப்படுவதால் இன்று அவர் யுவராஜ் சிங்குக்கு முன்னதாக களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற அணியே இன்றும் ஆட வாய்ப்புகள் உள்ளதால் அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகமே.

லேசாக கருத மாட்டோம்

இலங்கைக்கு எதிரான போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரைப் பொறுத்த வரை ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. எனவே இலங்கை அணியை லேசாக கருதமாட்டோம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடியதைப்போல் மிகச் சிறப்பான ஆட்டத்தை இலங்கைக்கு எதிராகவும் வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், நிருபர்களிடம் கூறியதாவது:

காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக களம் இறங்குவேன். அதே நேரத்தில் இப்போட்டியில் பந்து வீச மாட்டேன். கடந்த போட்டியிலேயே நான் ஆட விரும்பினேன். ஆனால் காயம் முழுவதுமாக குணமடையாமல் போட்டியில் ஆடவேண்டாம் என்று தேர்வாளர்கள் என்னை தடுத்தனர். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பெற்றது மோசமான தோல்விதான் இருப்பினும் அதிலிருந்து மீண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு மேத்யூஸ் கூறினார்.

மழை அபாயம்

இன்றைய போட்டியை எதிர் கொள்ள இரு அணிகளும் தயாராக உள்ள நிலையில் இப்போட்டிக்கும் மழை அபாயம் உள்ளது. இன்றைய தினம் லண்டனில் மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அணிகள் விவரம்:

இந்தியா

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

இலங்கை

ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெலா, அசெலா குணரத்னே, சமரா கபுகேதரா, நூவன் குலசேகரா, சுரங்கா லக்மல், மலிங்கா, குசால் மென்டிஸ், நூவன் பிரதீப், சீக்குகே பிரசன்னா, குசால் பெரேரா, திசரா பெரேரா, சந்தகன், உபுல் தரங்கா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in