ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் - 30 ஓவர்கள் கூட தாக்குப் பிடிக்காத இங்கிலாந்து!

ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் - 30 ஓவர்கள் கூட தாக்குப் பிடிக்காத இங்கிலாந்து!
Updated on
2 min read

பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது, டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் புதிய உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவை முதலில் தைரியமாக பேட் செய்ய அழைத்தார். 152 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது, ஆனால், பேட்டிங்கில் மீண்டும் கண்டபடி சொதப்பிய இங்கிலாந்து 30 ஒவர்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் 110 ரன்களுக்குப் பரிதாபமாகச் சுருண்டது.

ஜாஷ் டங் அட்டகாசமாக வீசி 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்க்க, கார்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற, அட்கின்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, நல்ல பவுலிங், கைகொடுத்த பீல்டிங்கினால் ஆஸ்திரேலியாவை 45.2 ஓவர்களில் 152 ரன்களுக்குச் சுருட்டியது இங்கிலாந்து அணி.

ஆஸ்திரேலியா தரப்பில் மைக்கேல் நேசர் அதிகபட்சமாக 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுக்க, கவாஜா 29, கிரீன் 17 என்று ரன்களை எடுத்தனர். பிற்பாடு மைக்கேல் நேசர் பந்து வீச்சிலும் சிறப்பாக வீசி ஜேக்கப் பெத்தேல் (1), ஜோ ரூட் (0), ஸ்டோக்ஸ் (16), பிரைடன் கார்ஸ் (4) ஆகியோர் விக்கெட்டுகளைச் சாய்த்து பந்து வீச்சிலும் ஸ்டார் ஆகத் திகழ்ந்தார்.

இன்று சாதனை பார்வையாளர்களைப் பதிவு செய்தது மெல்போர்ன், 94,119 பேர் முதல் நாள் ஆட்டத்தைக் கண்டு களித்தனர். 2015 உலகக் கோப்பை இறுதி பார்வையாளர்கள் எண்ணிக்கையையும் இன்று கடந்து விட்டனர். 1901-02 தொடருக்குப் பிறகு ஆஷஸ் தொடரில் மெல்போர்னில் முதல் நாள் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகள் விழுவது இப்போதுதான்.

மைதானம் நிச்சயம் ஐசிசி ஆய்வுக்குள் வரும். பிட்சில் 10 மி.மீ உயர புற்கள் இருந்தன என்பதால் பந்துகள் கண்டபடி ஸ்விங் ஆகி எகிறின. பேட்டிங் மிக மிகக் கடினமே. இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் மட்டுமே 2 அதிரடி சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 41 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். அவருக்கு அடுத்ததாக கஸ் அட்கின்சன் 28 ரன்களை அதிகபட்சமாக எடுத்திருக்கிறார். ஹாரி புரூக்கின் தைரிய அதிரடி நீடிக்கவில்லை. அட்டகாசமாக வீசிய ஸ்காட் போலண்ட் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

கடைசியில் ஆஸ்திரேலியா 42 ரன்கள் முன்னிலையில் ஒரே ஓவரை விளையாட இறங்கியபோது ஆச்சரியம் என்னவெனில், ஸ்காட் போலண்டும் டிராவிஸ் ஹெட்டும் ஓப்பனிங் இறங்கினர். அதை விட ஆச்சரியம் அந்த ஒரு ஓவரையும் முழுதும் ஸ்காட் போலண்ட் எதிர்கொண்டதே. அதிலும் பெரிய காமெடி என்னவெனில், போலண்ட் கொடுத்த ஒரு கடினமான கேட்சை 5-வது ஸ்லிப்பில் ஜேக்கப் பெத்தேல் ட்ராப் செய்ததுதான்.

இன்று வீசியது போல் பெர்த், பிரிஸ்பனில் வீசியிருந்தால் நிச்சயம் இங்கிலாந்து இந்தத் தொடரில் தேறியிருக்கும். தொடர் கையைவிட்டுப் போன பிறகு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில்தான் இங்கிலாந்து பவுலர்களுக்கு லெந்த் கிடைக்கிறது.

பந்துகள் ஸ்விங் ஆவதைப் பார்க்கும்போது இந்த டெஸ்ட் 3-ம் நாளைத் தாண்டாது என்றே தெரிகிறது.

ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் - 30 ஓவர்கள் கூட தாக்குப் பிடிக்காத இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in