

இந்திய அணியின் விரட்டல் மன்னன் விராட் கோலி எனும் ரன் எந்திரத்தை வீழ்த்த ஷார்ட் பிட்ச் பந்து வீச்சு என்ற உத்தியைப் பயன்படுத்தப் போவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் சவால் விடுத்துள்ளார்.
முதல் ஒருநாள் போட்டியில் 63/4 என்ற நிலையிலிருந்து கேப்டன் கோலியின் வழிகாட்டுதல் சதத்துடனு, கேதர் ஜாதவ்வின் அதிரடி சதத்துடனும் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஜேக் பால் பிபிசி ரேடியோ 5 நேரலையில் கூறும்போது, “விளக்கொளியின் ஆடும் போது பந்துகள் சற்று சறுக்கி கொண்டு செல்லும், இதனால் எழும்பும் ஷார்ட் பிட்ச் பந்துகளைப் பயன்படுத்தினால் கைகொடுக்கும்.
ஆனால் அதோடு பலவிதமான பந்துகளோடு ஷார்ட் பிட்ச் பந்துகளை கலந்து வீச வேண்டும், கோலியை அங்கு ஸ்திரமாக ஆட அனுமதிக்கக் கூடாது, இத்தகைய எகிறு பந்தை அவர் நேராக வானில் அடித்து கேட்ச் கொடுப்பார் என்று நம்பலாம்.
அவர் ஒரு ஆச்சரியகரமான வீரர். டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டத்தைப் பார்த்தோம், தற்போது ஒருநாள் போட்டிகளில் நன்றாகத் தொடங்கியுள்ளார்.
அவருக்கென்று தனிப்பட்ட திட்டம் வைத்துள்ளோம், அதனை களத்தில் செயல்படுத்துவோம் என்று நம்புகிறோம்” என்றார்.