

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 310 ரன்களை குவித்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கார்டிப் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்த்து இங்கிலாந்து அணி ஆடி வருகிற்து. டாஸில் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.
இதைத்தொடர்ந்து ஆடவந்த இங்கிலாந்து அணி, 37 ரன்களில் தங்கள் முதல் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ராய் 13 ரன்களில் மிலினின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இருப்பினும் அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஹேல்ஸ், ஜோ ரூட் ஆகியோர் உறுதியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 81 ரன்களைச் சேர்க்க, இங்கிலாந்து அணி வலுவடைந்தது. அந்த அணியின் ஸ்கோர் 118 ரன்களாக இருந்தபோது ஹேல்ஸ் (56 ரன்கள்) ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து 13 ரன்களில் மோர்கன் அவுட் ஆக 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் என்று இங்கிலாந்து அணி மீண்டும் சரிந்தது.
ஜோரூட் (64 ரன்கள்), ஸ்டோக்ஸ் (48 ரன்கள்), பட்லர் (61 ரன்கள்) ஆகியோரின் துடிப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. ஆனால் வேகமாக ரன்களைக் குவிக்கும் ஆசையால் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்கள் சரிந்தன. இதன் காரணமாக அந்த அணி 49.3 ஓவர்களில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஒரு நேரத்தில் இங்கிலாந்து 41 ஓவர்களில் 230/6 என்று தடுமாறியது, ஆனால் பட்லர் தனது திடீர் அதிரடி ஷாட்களால் அசத்தினார், குறிப்பாக மில்னவின் ஷார்ட் பிட்ச் பந்தை டென்னிஸ் ஃபோர்ஹேண்ட் ஷாட் போல் லாங் ஆஃப் மேல் அடித்த சிக்ஸ் மறக்க முடியாத ஷாட் ஆகும். பட்லர் 48 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கடைசியில் பட்லருக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை, 49.3 ஓவர்களில் இங்கிலாந்து 310 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்தது, ஒருவேளை கடைசி 3 பந்துகளை வீச வேண்டிய நிலை ஏற்பட்டு பட்லர் ஸ்ட்ரைக்கிற்கு வந்திருந்தால் இன்னும் 10 ரன்களை இங்கிலாந்து கூடுதலாக எடுத்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.
நியூஸிலாந்து அணியில் மில்ன ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், டிம் சவுத்தி 2 விக்கெட்களையும், போல்ட், சாண்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் மில்ன 10 ஓவர்களில் 79 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக ரன்களை கொடுத்தாலும் ஜேசன் ராய், ஹேல்ஸ், பிளங்கெட் விக்கெட்டுகளை சரியான தருணத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி மொத்தம் 10 சிக்சர்களை அடித்தது.
2015 உலகக்கோப்பைக்கு பிறகு அதிகமாக 300 ரன்களை எட்டிய அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. தற்போது மழை தொடங்கியுள்ளது.