Last Updated : 15 Sep, 2016 02:55 PM

 

Published : 15 Sep 2016 02:55 PM
Last Updated : 15 Sep 2016 02:55 PM

முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் எல்.பாலாஜி

இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் லஷ்மிபதி பாலாஜி முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆனால் தொடர்ந்து டிஎன்பிஎல், மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடவிருப்பதாக அவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. இப்போது இளம் குடும்பம் உள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளாக நான் அனைத்தையும் கொடுத்து ஆடினேன். 20 ஓவர் தொடர்களான டிஎன்பிஎல், ஐபிஎல் போன்றவற்றில் தொடர்ந்து ஆடுவேன்” என்றார்.

ரத்தமும், வேர்வையும் கொண்ட இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் காயங்கள் இவரை ஆட்டிப்படைத்தது. ஓரளவுக்கு குறைவாக ஆடினாலும் தேசிய அளவில் நல்ல பெயர் எடுத்தார் பாலாஜி. வக்கார் யூனிஸுக்கு பிடித்த இந்திய பவுலர் பாலாஜி. இவரது ஆதர்சம் அனில் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது.

“கும்ப்ளே எப்படி இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டார் என்று என்னை நானே கேட்டுக் கொண்டால், எனக்கு நிச்சயம் விடை கிடைக்கும்” என்கிறார் பாலாஜி.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை ஆடாவிட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். 2004-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரில் பாகிஸ்தானில் பிரபலமான ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் இருந்தார் என்றால் அது எல்.பாலாஜி. பாலாஜியின் சவாலான தன்மையுடன் புன்னகையுடன் எல்லைக்கோட்டருகே பாகிஸ்தான் ரசிகர்களை எதிர்கொண்டது பாக். ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பெற்ற ஒரு வீரராக பாலாஜியை உருவாக்கியது.

இது பாலாஜியின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு டெஸ்ட் தொடராகும், இறுதி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்ற போது இன்சமாம் உல் ஹக் விக்கெட் உட்பட அந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார் அவர். “அது ஒரு லேட் அவுட்ஸ்விங்கர், இன்சமாம் மட்டையின் விளிம்பில் பட்டு அவுட் ஆனார், அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியாது. நாம் பாகிஸ்தான் மண்ணில் முதன்முறையாக இந்த டெஸ்டுடன் தொடரையும் வென்றோம்.

ஜாகிர் கான் என்னை எப்போதும் ஊக்குவித்து வந்தார், தனது யோசனைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு அருமையான மனிதர்” என்றார் பாலாஜி.

பிறகு மொஹாலி டெஸ்ட் போட்டியில் இதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ந்து மணிக்கு 140கிமீ வேகத்தில் வீசினார். பாகிஸ்தான் பேட்டிங்கை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி 9 விக்கெட்டுகளை அந்த டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினார். “நான் காயத்திலிருந்து மீண்டு மாற்றியமைத்துக் கொண்ட ஆக்சனில் பந்து வீசினேன். நான் நல்ல வேகத்தில் வீசினேன், யூனிஸ் கான் விக்கெட்டை சராசரியான ஒரு பந்தில் வீழ்த்தினேன்.

இந்திய அணிக்கு ஆடும் போது எனக்கு வயது 20. பயிற்சியாளர் ஜான் ரைட் என்மீது நம்பிக்கை வைத்தார். என் மீது நானே நம்பிக்கை வளர்க்க உதவினார்” என்கிறார் பாலாஜி.

8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாலாஜியின் சராசரி 37.18. இதில் 2 முறை இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் ஒருமுறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 106 போட்டிகலில் 26.10 என்ற சராசரியின் கீழ் 330 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 30 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிக்கன விகிதம் 5.57. ஒருமுறை 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது ரிக்கி பாண்டிங்கை ஒருநாள் போட்டி ஒன்றில் கடுமையான இன்ஸ்விங்கர், அவுட்ஸ்விங்கர், ஸ்லோயர் ஒன் என்று படுத்தி எடுத்து கடைசியில் ஒரு ஸ்லோ பந்தில் பாண்டிங்கை தன்னிடமே கேட்ச் கொடுக்க வைத்தது நினைவிலிருந்து அகலாத தருணமாகும்.

தமிழக அணிக்காக இவர் அறிமுகமான போட்டி கொழும்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு எதிரான போட்டியாகும். 2-ம் நாளில் அசத்தலாக வீசிய பாலாஜி, 9 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

“இந்திய பிட்ச்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் வெற்றியடைவது கடினம், எப்போதும் ஆக்ரோஷமாக வீச வேண்டும், ஸ்விங் செய்ய வேண்டும், ரிவர்ஸ் ஸ்விங், யார்க்கர்களுடன் ஷார்ட் பிட்ச் பந்துகளையும் புத்தி கூர்மையுடன் பயன்படுத்த வேண்டும்” என்கிறார் பாலாஜி.

தமிழ்நாடு அணியின் பந்து வீச்சில் முக்கியப் பங்கு வகித்த பாலாஜி, சாத்தியமில்லாத சூழ்நிலைகளிலிருந்து தமிழ்நாடு அணிக்கு தனது பந்து வீச்சு மூலம் வெற்றி பெற்றுத் தந்துள்ளார். 2011-12 சீசனில் கேப்டனாக இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றார்.

“தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், என்னை வழிநடத்திய அனைத்துப் பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். தமிழ்நாடு ரஞ்சி அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என்று தெரிகிறது.

ஒரு தைரியமான, தன்னம்பிக்கையான, அருமையான பவுலர் இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவையாற்ற முடியாமல் போனது இந்திய கிரிக்கெட்டின் துரதிர்ஷ்டமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x