

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஜெர்மனி அணி தகுதி பெற்றது. காலிறுதிப் போட்டியில் அந்த அணி, இத்தாலியை பெனால்டி ஷூட் அவுட்டில் 6-5 என்ற கோல்கணக்கில் வென்றது.
யூரோ கோப்பைக்கான கால்பந்து போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த காலிறுதிப் போட்டியில் இத்தாலி அணியை எதிர்த்து ஜெர்மனி விளையாடியது. உலக கால்பந்து சாம்பியனான ஜெர்மனி அணி, யூரோ கோப்பையையும் வெல்லும் உத்வேகத்துடன் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆனால் அதற்கு சற்றும் சளைக்காமல் இத்தாலி அணியும் போராட ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மெசட் ஒசில் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் அந்த முன்னிலை சிறிது நேரமே நீடித்தது. 78-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த பெனால்டி ஷூட் வாய்ப்பை பயன்படுத்தி லியனார்டோ போனுகி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரு அணி வீரர்களும் தீவிரமாக முயன்றனர். இரு அணிகளின் கோல்கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டதால் மேற்கொண்டு யாராலும் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர இறுதியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதிலும் வெற்றியாளரைத் தீர்மானிப்பது கடினமாக இருந்தது. வழக்கமாக இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டு அதில் அதிக கோல் அடிப்பவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆட்டத்தில் 5 பெனால்டி ஷூட் அவுட்களின் இறுதியிலும் வெற்றியாளரை தீர்மானிக்க முடியவில்லை.
ஜெர்மனி அணியில் புகழ்பெற்ற வீரர்களான ஒசில், தாமஸ் முல்லர், ஸ்க்வீன்ஸ்டிகர் ஆகியோரும், இத்தாலி அணியில் சிமோன் சாசா, கிராசியானோ பெல்லே, போனுக்கி ஆகியோரும் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கத் தவறினர். இதனால் தலா 8 பெனால்டி ஷூட் வாய்ப்புகளுக்கு பிறகு இரு அணிகளும் 5-5 என்று சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் 9-வது பெனால்டி ஷூட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தாலி வீரரான டார்மியான், இந்த வாய்ப்பை தவறவிட ஜெர்மனியின் ஹெக்டர் கோல் அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.
மிக நீண்ட போராட்டத்துக்கு பிறகு 6-5 என்ற கோல்கணக்கில் இத்தாலியை வென்ற ஜெர்மனி அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அரையிறுதிப் போட்டி யில் பிரான்ஸ் அல்லது ஐஸ்லாந்து அணிக்கு எதிராக அந்த அணி விளையாடவுள்ளது.