

டெஸ்ட் போட்டிக்கான தலைமை பொறுப்பை தோனியிடமிருந்து விராட் கோலிக்கு மாற்ற வேண்டும் என்ற ஆஸி.முன்னாள் கேப்டன் இயன் சாப்பலின் கருத்தை ஆடம் கில்கிறிஸ்ட் மறுதலித்தார்.
வுலாங்காங் என்ற ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் பெங்களூரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆடம் கில்கிறிஸ்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது:
"நான் நிறைய முறைக் கூறிவிட்டேன். அவர் எப்போது இந்திய கேப்டன் பொறுப்பிற்கு வந்தாரோ அப்போது முதல் நான் இதைத்தான் கூறி வருகிறேன். அவர் ஒரு பிரமாதமான கேப்டன் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது என்று தோனியின் தலைமையில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது” என்றார்.
2015 உலகக் கோப்பப் பற்றி...
“ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒரு அணியை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. 3 அல்லது 4 அணிகளுக்கு வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன்.
இந்திய அணியின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பற்றி...
இப்போதைக்கு அனைத்து அணிகளும் உள்நாட்டு அனுகூலங்களை அனுபவித்து வருகின்றனர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகளை நீங்கள் உதாரணத்திற்குப் பார்க்கலாம். வெளிநாடுகளில் இந்த 3 அணிகளுமே சரியாக விளையாடுவதில்லை.
இந்திய அணியும் விராட் கோலியும் அவர்களின் தவறுகளை இந்நேரம் சரி செய்து கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறேன். இந்திய பேட்டிங் வரிசை ஏன் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆட முடியாது என்பதற்கான எந்த ஒரு காரணமும் இல்லை. பிட்ச்களில் சீறும் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகியவை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
இருப்பினும், வெற்றி தோல்விகள் அந்தந்த அணியின் மனக் கட்டமைப்பைப் பொறுத்ததே.” இவ்வாறு கூறினார் கில்கிறிஸ்ட்.