Published : 16 Jun 2017 11:00 AM
Last Updated : 16 Jun 2017 11:00 AM

கேதார் ஜாதவ் புத்திசாலி: விராட் கோலி | மடத்தனமாக விக்கெட்டைக் கொடுத்தோம்: மோர்டசா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வங்கதேசத்தை துவைத்துக் காயப்போட்ட இந்திய வெற்றிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்தவர் கேதார் ஜாதவ். அவர் தமீம் இக்பால், முஷ்பிகுர் இருவரையும் வீழ்த்த வங்கதேச பேட்டிங் சரிவு கண்டது.

இதனையடுத்து கேதார் ஜாதவ் குறித்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர், கேப்டன் விராட் கோலியும், மஷ்ரபே மோர்டசாவும்.

விராட் கோலி கூறும்போது:

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதுதான் நம் டாப் ஆர்டர் பேட்டிங்கின் தரம். கேதார் ஜாதவ் ஒன்றும் எதிர்பாராமல் ஆச்சரியமேற்படுத்தும் பவுலர் அல்ல, அவர் புத்திசாலி, பந்தை எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர், பிட்ச் என்ன செய்கிறது என்பதையும் புரிந்தவர்.

இந்தப் பிட்சில் 300-310 ரன்கள்தான் நல்ல ஸ்கோர், அப்படியிருக்கையில் 264 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதில் கேதார் ஜாதவ் எடுத்த 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தை ஏற்படுத்தின.

பேட்டிங்கில் நான் 10-15 பந்துகள் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆடினேன். கடந்த முறை வந்தவுடன் ஆட்டமிழந்தேன். எனவே நான் அதற்கேற்ப ஆட வேண்டும், எனக்கு சவால்கள் பிடிக்கும். நம்பிக்கை வளர்ந்தது. ஷார்ட் பிட்ச் பந்துகள் பற்றி கூற வேண்டுமெனில் நாம் நன்றாக ஆடும் போது அது ஒரு கவலையில்லை.

இறுதியில் பாகிஸ்தானுடனான போட்டியை இன்னொரு போட்டி என்பதாகவே எடுத்துக் கொள்வோம், இவ்வாறு கூறுவது சோர்வளிக்கக்கூடியது என்று எனக்குத் தெரியும், ஆனால் எங்களது மனநிலை இதுதான்.

நடுவரிசை வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காதது கவலை தரும் விஷயமல்ல, அனைவரும் பயிற்சியில் அருமையாகவே அடித்து ஆடி வருகின்றனர்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

மோர்டசா கூறும் போது, “இன்று நாங்கள் ஆடியது ஏமாற்றம் தருகிறது. 320-330 ரன்களைக் குவிக்கும் நிலையில் இருந்தோம். ஆனால் இந்திய பவுலர்கள் ரன்கொடுக்காமல் சில பந்துகளை வீசினர். பகுதி நேர வீச்சாளர் (கேதார் ஜாதவ்) என்பதால் அதிக ரன்களை எடுக்கலாம் என்று பார்த்தனர். எப்போதாவது வீசும் பவுலரிடத்தில் விக்கெட்டுகள் கொடுத்தது பாதித்தது. அங்கிருந்து அவர்கள் நல்ல இடங்களில் பந்தை பிட்ச் செய்து கட்டுப்படுத்தினர்.

இப்படியெல்லாம் நடக்கும் என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் நிறைய போட்டிகளை ஆடி அனுபவம் பெற்றுள்ளோம் சில வேளைகளில் ரன்கள் எடுக்க முடியாது அதற்காக பதற்றம் அடைதல் கூடாது, மடத்தனமான ஷாட்களை ஆடினோம். இந்தப் பிட்சில் 260-270 என்பது ஸ்கோரே அல்ல.

இவ்வாறு கூறினார் மோர்டசா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x