மும்பையுடன் பிளே ஆஃப் சுற்றில் மோதல்: கொல்கத்தா பவுலர்களுக்கு கம்பீர் பாராட்டு

மும்பையுடன் பிளே ஆஃப் சுற்றில் மோதல்: கொல்கத்தா பவுலர்களுக்கு கம்பீர் பாராட்டு
Updated on
2 min read

பெங்களூருவில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி மும்பையுடன் இன்னொரு பிளே ஆஃபில் மோதுகிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் சன் ரைசர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார், கூல்டர் நைல் (3/20), உமேஷ் யாதவ் (2/21), நரைன் (0/20) ஆகியோரின் அபாரமான பந்து வீச்சில் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சன் ரைசர்ஸ் கேப்டன் வார்னர் 37 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக வில்லியம்சன் 24 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய போது மிகவும் தாமதமானதால் 6 ஓவர்களில் 48 ரன்கள் என்று டக்வொர்த் லூயிஸ் முறைப்படி கொல்கத்தாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் கொல்கத்தா சொதப்பி உத்தப்பா (1), கிறிஸ் லின் (6), யூசுப் பத்தான் (0) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 12/3 என்று 1.1 ஓவர்களிலேயே தடுமாற்றம் கண்டது. பிறகு கவுதம் கம்பீர் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுக்க ஜக்கி 5 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்க 5.2 ஓவர்களில் 48/3 என்று கொல்கத்தா வெற்றி பெற்றது.

இதனையடுத்து மும்பையுடன் இன்னொரு பிளே ஆஃப் சுற்றில் மோதுகிறது கொல்கத்தா. ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலியாவின் கூல்ட்டர் நைல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அணியின் வெற்றிக்கு பவுலர்களே காரணம் என்று பாராட்டிய கம்பீர் கூறியதாவது:

பவுலர்கள் பாராட்டுக்குரியவர்கள். பவுலர்களே வெற்றிக்கான வழியை அமைத்துக் கொடுத்தனர்.

சன் ரைசர்ஸ் அணியை 128 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது அபாரமானது. சில வேளைகளில் எங்களிடம் தீவிரம் குறைவாக இருந்தது. களத்தில் நாங்கள் தடுத்த ஒவ்வொரு ரன்னும் நாங்கள் 1 ரன் குறைவாக எடுக்க வேண்டியிருந்ததை உறுதி செய்தது. 11 வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் இலக்கைத் துரத்தும் போது பேட்டிங்கில் கொஞ்சம் நிதானம் காட்டியிருக்க வேண்டும். நாம் பொதுவாக 160 ரன்களுக்கு குறி வைத்தால் நல்ல ஸ்கோரை எடுக்கலாம். ஒவ்வொரு ஆட்டத்திலும் 200 ரன்கள் சாத்தியமில்லை” என்றார்.

சன் ரைசர்ஸ் கேப்டன் வார்னர் கூறும்போது, “நாங்கள் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்தப் பிட்ச் பேட்டிங்குக்கு எளிதானதல்ல. பந்து நின்று வந்தது. இந்த சீசன் முழுதுமே இந்தப் பிட்ச் ஏமாற்றமளிப்பதாகவே அமைந்தது. கொல்கத்தா அபாரமாக வீசினர்.

அவர்கள் இலக்கை விரட்டும் போது 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களது தீவிரத்தைக் காட்டுவதாக அமைந்தது. ஆனால் அவர்கள் இந்தப் போட்டியில் நிச்சயம் கடுமையாக ஆடுவார்கள் என்று எதிர்பார்த்தோம், அதுதான் நடந்தது. கடந்த ஐபிஎல் தொடர் போலவே நாங்கள் இந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடினோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in