

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2016-ம் ஆண்டை இந்திய அணி நம்பர் ஒன் இடத்து டன் நிறைவு செய்தது. அதே வேளையில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே முதல் இரு இடங்களுடன் ஆண்டை நிறைவு செய்தனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அஸ்வின், ஆல்ரவுண்டர்கள் பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்தப் பட்டியலில் ஜடேஜா 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய பந்து வீச்சாளர்கள் இருவர் முதல் இரு இடங்களை பிடிப்பது இது 2-வது முறையாகும்.
இதற்கு முன்னர் கடந்த 1974-ல் இந்தியாவின் பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர் ஆகியோர் முதல் இரு இடங்களை பிடித்திருந்தனர். சுமார் 42 வருடங்களுக்கு பிறகு தற்போது அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் அசார் அலி 10 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 120 புள்ளி களுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆஸ்திரேலிய அணி 15 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் 2-வது இடத்தில் உள்ளது.