Published : 22 Apr 2017 08:09 PM
Last Updated : 22 Apr 2017 08:09 PM

முன்னால் களமிறங்கி முடித்துக் காட்டினார் தோனி: பரபரப்பான ஆட்டத்தில் புனே அபார வெற்றி!

புனேயில் நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோனியின் அபார ஆட்டத்தினால் புனே அணி வெற்றியை ருசித்தது.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய புனே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2 ரன்கள் வெற்றிக்குத்தேவைப்படும் நிலையில் கவுல் வீசிய கடைசி பந்தை பலத்த நெருக்கடிகளுக்கு இடையே தோனி எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி விளாசி வெற்றிகரமாக பினிஷிங் செய்தார், இன்று 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி கடைசியில் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அவருடன் மனோஜ் திவாரி 8 பந்துகளில் 3 முக்கியமான பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இருவரும் இணைந்து 23 பந்துகளில் 58 ரன்களை வெற்றிகரமாக சேர்த்து புனே அணியை அபார வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

தோனி தொடக்கத்தில் சற்றே திணறிய போது கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவைப்பட்டது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில் இலக்கை விரட்டிய அணிகள் ஐபிஎல் வரலாற்றில் 3 முறையே வென்றுள்ளன. இன்று 4-வது இத்தகைய வெற்றியை தோனி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தோனி பினிஷிங் நடந்தேறிய விதம்

4-ம் நிலையில் களமிறங்கிய தோனி தொடக்கத்தில் பந்துகளை விருப்பம் போல் அடிக்க முடியவில்லை, கணிப்பதில் தவறு நிகழ்த்தினார், மேலும் பவுலர்களும் அவருக்கு விருப்பமில்லாத லெந்தில் வீசி அவரைக் கட்டுப்படுத்த 19 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்த போது புனே தோல்வியுறும் என்ற எண்ணமே ஏற்பட்டது.

கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மொகமது சிராஜ் வீசிய 16-வது ஓவரிலும் 6 ரன்களே வந்தது. 4 ஓவர்களில் 56 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் 17-வது ஓவரை புவனேஷ் குமார் வீச வந்தார். முதல் பந்தை யார்க்கர் லெந்தில் வீச பென் ஸ்டோக்ஸ் (10) நேராக டீப் மிட்விக்கெட்டில் பதிலி வீரர் சங்கரிடம் கேட்ச் ஆனது. திவாரி களமிறங்கினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் மிட்விக்கெட் முன்னால் இருப்பதைக் கண்ட அவர் அதே திசையில் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்களே வந்தது, புனே 17 ஓவர்கள் முடிவில் 130/4 என்ற நிலையில் தோனி 22 பந்துகளில் 25 ரன்களையே எடுத்திருந்தார்.

மைதானத்தில் ‘தோனி... தோனி... என்று ரசிகர்கள் ஆரவாரக் குரல்களை எழுப்பினர். 18-வது ஓவரை மொகமது சிராஜ் வேகப்பந்து வீச்சாளர் வீச வந்தார்.

முதல் பந்தில் தோனி 1 ரன்னையே எடுக்க முடிந்தது, மனோஜ் திவாரி அடுத்த பந்தை நகர்ந்து கொண்டு ஆளில்லா ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி அடித்தார். அடுத்ததாக திவாரி 1 ரன் எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். அப்போது சிராஜ் மோசமான ஒரு பந்தை வீசினார் மெதுவான ஷார்ட் பிட்ச் பந்தை தோனி பார்த்து விட்டார் லாங் ஆனில் சிக்ஸ். அடுத்த பந்தும் அதே போல் வீச இம்முறை தோனி தேர்ட் மேனில் பவுண்டரி அடித்தார். பிறகு கடைசி பந்தில் 1 ரன் எடுத்து அடுத்த ஓவருக்கான தனது ஸ்ட்ரைக்கைத் தக்கவைக்க 18-வது ஓவரில் 17 ரன்கள் வந்தது.

19-வது ஓவரை புவனேஷ் வீச வந்தார். முதல் பந்தை வைடாக யார்க்கராக வீசினார் ஆனால் வைடு என்று தீர்ப்பானது. அடுத்த பந்து தோனி தன் இருகால்களுக்கிடையேயும் பிளிக் செய்ய பின்னால் பந்து பவுண்டரியானது. அடுத்த பந்து தோனி லெக் திசையில் நகர வைடு யார்க்கர் ஆனால் இம்முறை தோனி சக்திவாய்ந்த ஸ்லேஷ் செய்ய தேர்ட் மேனில் மீண்டும் பவுண்டரி. அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்பில் புல் லெந்த் பந்து டிபிக்கல் தோனி ஷாட் லாங் ஆனில் சிக்ஸ் என்பதோடு தோனி அரைசதம் கடந்தார். இந்த ஓவரில் 19 ரன்கள் வர 19-வது ஓவர் முடிவில் புனே அணி 166/4 என்று இருந்தது.

20வது ஓவரை கவுல் வீச வந்தார். இதில் முதல் பந்தை திவாரி மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க அங்கு ஓடி வந்து டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றார் ரஷித் கான் ஆனால் பந்து கைகளில் பட்டு பவுண்டரி ஆனது. அடுத்த 3 பந்துகளில் 3 சிங்கிள்களே எடுக்க முடிந்தது. 5-வது பந்தை தோனி பிளிக் செய்து விறுவிறுவென 2 ரன்களை எடுத்தார். கடைசி பந்து வெற்றிக்குத் தேவை 2 ரன்கள், டைக்கு 1 ரன். ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள், ஆனால் தோனி அமைதியாக இருந்தார். வார்னர் டீப் பைன்லெக், ஸ்கொயர் லெக், லாங் ஆன் வைத்திருந்தார், எனவே லெக் ஸ்டம்பில் யார்க்கர்தான் கவுல் வீசியிருக்க வேண்டும், ஆனால் மிடில் ஸ்டம்பில் பந்தை வீச தோனி எக்ஸ்ட்ராகவரில் அனாயசமாக பவுண்டரி அடித்து வெற்றிக்கு இட்டுச் சென்றார். அவர் எதிர்கொண்ட கடைசி 14 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார் தோனி.

முன்னதாக புனே ரஹானே 2 ரன்களில் வெளியேற மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த திரிபாதி 41 பந்துகளில் 6 பவுண்டரிகல் 3 சிக்சர்களுடன் 59 ரன்கள் சேர்த்தார், இவரும் ராஞ்சியைச் சேர்ந்தவர்தான், எனவே இரண்டு ராஞ்சி வீரர்கள் புனேவுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.

ஸ்டீவ் ஸ்மித் 2 தொடர் சிக்சர்களுடன் 27 ரன்கள் சேர்க்க திரிபாதியும் இவரும் இணைந்து 7.4 ஓவர்களில் 72 ரன்களைச் சேர்த்தனர், அப்போது ஸ்மித் இன்று அருமையாக வீசிய ரஷீத் கானிடம் பவுல்டு ஆனார். திரிபாதியும் ரஷீத் கானின் அருமையான பீல்டிங்கில் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். 13.1 ஓவர்களில் 98/3 என்று இருந்த புனே, ஸ்டோக்ஸ், தோனி ஜோடி மூலம் 16.1 ஓவர்களில் 121 ரன்களை எட்டிய போதுதான் ஸ்டோக்ஸ் ஏமாற்றமளித்தார்.

அதன் பிறகே தோனி, திவாரி ஜோடி வெளுத்து வாங்கினர். ரஷித் கான் 4 ஒவர்களில் 17 ரன்களையே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். அருமையான பந்து வீச்சு.

முன்னதாக டாஸ் வென்ற ஸ்மித் ஹைதராபாத்தை களமிறக்கினார். மீண்டும் வார்னர் தவண் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர் இருவரும் இணைந்து 8 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 43 ரன்களையும் தவன் 30 ரன்களையும் அபாய வில்லியம்சன் 21 ரன்களையும் எடுக்க மோய்சஸ் ஹென்றிக்ஸ் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஹூடா 19 ரன்களுக்கு நாட் அவுட்டாக இருந்தார். ஹைதராபாத் 176 ரன்கள் எடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x