டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின் தள்ளி பாகிஸ்தான்  5-வது இடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின் தள்ளி  பாகிஸ்தான்  5-வது இடம்
Updated on
1 min read

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்.

5-வது இடத்தில் இருந்த இந்திய அணியை 6-வது இடத்துக்கு தள்ளிய பாகிஸ்தான் அணி, 5-வது இடத்தைப் பிடித்தது. துபாயில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதே தரவரிசையில் அந்த அணி பெற்றுள்ள முன்னேற்றத்துக்கு காரணம்.

இதுதவிர டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடிக்கும் ஆஸ்திரேலியாவின் முயற்சிக்கும் பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இப்போது தென்னாப்பிக்க அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த இடத்தை பிடிக்க முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா இருந்தது. ஒருநாள் தொடரில் பெற்ற அபார வெற்றியால், டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை பந்தாடி விடலாம் என்ற நோக்கத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆனால் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர்.

அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும் தொடர்ந்து 2-வது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியுமே தவிர முதலிடத்தை பிடிக்க முடியாது.

அதே நேரத்தில் 2-வது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் வென்றால் 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 4-வது இடத்தில் உள்ள இலங்கை ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தைப் பிடிக்கும். 2-வது டெஸ்ட் டிரா ஆனால் இலங்கையை பின்தள்ளி பாகிஸ்தான் 4-வது இடத்தைப் பிடிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in