Last Updated : 12 Oct, 2014 02:44 PM

 

Published : 12 Oct 2014 02:44 PM
Last Updated : 12 Oct 2014 02:44 PM

மாற்றமில்லாமல் ஏற்றம் காண முடியாது!

ஒலிம்பிக்கில் அமெரிக்காவும், சீனாவும் பதக்கங்களைக் குவிக்கும் போது அதைப் பார்த்து வியக்கும் நாம், பதக்கப் பட்டியலில் இந்தியா எங்கு இருக்கிறது என்று லென்ஸை வைத்து தேடி கடைசியில் 50 இடங்களுக்கு பின்னால் இருப்பதை கண்டுபிடிக்கும்போது கண்கள்கூட சோர்வடைந்து போயிருக்கும். அப்போது கோபத்தில் இந்திய வீரர்கள் எதற்கும் லாயக்கில்லை என்று திட்டித்தீர்க்கிறோம். நம்முடைய அரசாங்கத்தையும் குறை கூறுகிறோம்.

அரசாங்கத்தின் மீது பழிபோடு வது நியாயமாக இருக்காது. அரசு தன் சக்திக்கு முடிந்த அளவுக்கு நிதியுதவி அளிக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் ஒரே பிரச்சினை விளையாட்டுக்காக நிதியை கொடுத்துவிட்டு இவ்வளவு தொகை செலவு செய்திருக்கிறோம் என்று அறிக்கை மூலம் விளம்பரம் தேடிக் கொள்வதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைப்பதுதான். விளையாட்டு அமைப்புகளை அரசு கண்காணிப்பதில்லை. கண்காணித் தாலும் விளையாட்டு சங்கங்களில் இருக்கும் பெரும்புள்ளிகள் அவர் களுக்கு இடையூறு செய்கிறார்கள்.

சங்கங்களுக்கு கட்டுப்பாடு

விளையாட்டு சங்கங்களில் சுயலாபத்துக்காக ஒட்டிக்கொண்டி ருக்கும் கறுப்பு ஆடுகளை விரட்டியடிக்க வேண்டும். விளையாட்டுக்கும், வீரர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நிர்வாகிகளாக வரவேண்டும். ஒரு சங்கத்தின் செயல்பாடு சரியில்லை, ஊழல் செய்கிறார்கள் என்பது தெரிய வந்தால் அதை அரசே கலைக் கலாம். அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசுக்கு ஏன் அந்த அதிகாரத்தைக் கொடுக்கக்கூடாது?

ஒருநபர் அதிகபட்சம் இரண்டு முறைக்கு மேல் நிர்வாகியாக பதவி வகிக்கக்கூடாது. விளையாட்டுடன் தொடர்பில்லாதவர்கள் நிர்வாகியாக வரக்கூடாது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது. ஏனெனில் அவர்களால் நிச்சயம் துடிப்பாக செயல்பட முடியாது. அனைத்து சங்கங்களுக்கும் இணையதளம் ஏற்படுத்தி அதில் அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தையும் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இடம்பெறச் செய்ய வேண்டும். இவையெல்லாம் சாத்தியமாகிவிட்டால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

அரசு-தனியார் கூட்டு முயற்சி

அரசு-தனியார் இரு தரப்பும் கூட்டு முயற்சியோடு இணைந்து செயல்பட்டாலொழிய இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்த முடியாது. 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் விளையாட்டுக்கென அரசால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஒதுக்குவது இயலாத காரியம். எனவே விளையாட்டுத் துறையில் தனியாரின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால் அதற்கு விளையாட்டு சங்கங்கள் ஊழலின்றி செயல்பட வேண்டும். அப்படி செயல்படும்பட்சத்தில் எளிதாக ஸ்பான்சர் வாங்க முடியும்.

சென்னை போன்ற பெரு நகரங் களில் ஸ்பான்சர் வழங்க நிறைய பேர் தயாராக இருந்தாலும், பலர் அணுகுவதில்லை என்ற குற்றச் சாட்டு இருக்கிறது. சென்னையில் நடைபெற்று வரும் சென்னை லீக் கால்பந்து போட்டிக்கு செயின்ட் ஜோசப் குழுமம் ரூ.10 லட்சம் ஸ்பான்சர் செய்கிறது. இதேபோன்று ஒவ்வொரு சங்கமும், ஒரு பெரிய குழுமத்தை ஸ்பான்சராக பிடிக்க முடியும்.

விளையாட்டு சங்கங்கள் ஓரளவு தீவிரமாக செயல்பட்டால் அந்த விளையாட்டு வளரத் தொடங்கும். அதில் நிறைய பேருக்கு ஆர்வம் ஏற்படும்போது பிரபலமடையும். அப்போது அதை தொழில்முறை விளையாட்டுப் போட்டிகளாக மாற்ற லாம். அதனால் விளையாட்டு சங்கங் களுக்கு மட்டுமின்றி, வீரர்களுக்கும் ஸ்பான்சர் கிடைக்கும். விளம்பர வருவாய் ஈட்ட முடியும்.

தொழில்முறை லீக்

ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து அதே பாணியில் ஹாக்கி, பாட்மிண்டன், இப்போது கால்பந்து ஆகியவற்றிலும் தொழில்முறை லீக் போட்டிகள் வந்திருக்கின்றன. இது நல்ல மாற்றம்தான். ஆனால் இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் சார்பில் களமிறங்கும் சென்னையின் எப்.சி. அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர்கூட இடம்பெறவில்லை. சந்தோஷ் டிராபியில் கலக்கிய ரீகன், ரிஜூ, சுதாகர் மற்றும் ஐ-லீக்கில் அசத்திய கோல் கீப்பர் சதீஷ் போன்ற திறமையான வீரர்கள் தமிழகத்தில் இருந்தும்கூட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை சார்பில் பங்கேற்கும் அணியில் சென்னை வீரர்களுக்கே வாய்ப்பளிக்காவிட்டால் இந்தப் போட்டியால் என்ன லாபம்?

இந்த விஷயத்தில் தமிழக வீரர்களின் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு கால்பந்து சங்கத்தைத்தான் சாரும். ஆனால் அவர்கள் அதை செய்ய தவறிவிட்டார்கள். ஐஎஸ்எல் போன்ற தொழில்முறை போட்டிகளில் உள்ளூர் வீரர்களுக்கு கணிசமான அளவுக்கு வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வது மிக முக்கியமானதாகும்.

தரமான பயிற்சியாளர்கள்

இதேபோல் தரமான வீரர்களை மட்டுமல்ல, திறமையான பயிற்சி யாளர்களையும் அடையாளம் காண வேண்டும். உள்ளூரில் திறமையான பயிற்சியாளர் இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து பயிற்சியாளரை அழைத்து வந்து அவர்களுக்கு கொள்ளை சம்பளம் கொடுக்கிறோம். தமிழகத்தில்கூட தடகளப் பயிற்சியாளர் நாகராஜ், கால்பந்து பயிற்சியாளர் சபீர் பாஷா என ஏராளமான திறமைசாலிகள் இருக்கிறார்கள்.

தனிமனிதராக இருந்து நாகராஜ் உருவாக்கிய சர்வதேச வீரர்களின் எண்ணிக்கை 24. அதில் குறிப்பிடும்படியாக சொல்வதானால் கே.என்.பிரியா, ரேவதி, காயத்ரி, நீளம் தாண்டுதலில் தேசிய சாதனையை வைத்திருக்கும் பிரேம்குமார் போன்றவர்கள் நாகராஜால் பட்டை தீட்டப்பட்டவர்கள்தான்.

நம் நாட்டின் தெருக்களிலும், மூலை முடுக்குகளிலும் பல உசேன் போல்ட்டுகளும், மைக்கேல் பெல்ப்ஸுகளும், நடால்களும் ஒளிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் பிரச்சினை.

சரியான வீரர்களை இனம் கண்டறிவது, திறமையின் அடிப்படையில் மட்டுமே வீரர்களை தேர்வு செய்வது, நல்ல உள்கட்டமைப்பு வசதி, முறையான திட்டமிடுதல் என மாற்றத்துக்கு தேவையான விஷயங்களை செய்யாத வரையில் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு பலனில்லை.

தற்போதைய நிலை தொடருமானால் ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, எத்தனை ஒலிம்பிக் ஆனாலும், பதக்கப் பட்டியலில் பார்வைக்கு எட்டாத இடத்தில்தான் இந்தியா இருக்கும். ஆனாலும் வரும் காலங்களில் மாற்றம் வரும் என்று நம்புவோம். அந்தத் தருணத்திற்காக காத்திருப்போம்!

சின்ன சின்ன விஷயங்களுக்கே போராட வேண்டியிருக்கிறது: நாகராஜ்

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் கூறுகையில், “விளையாட்டு வீரர்கள் சாதிப்பதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் முதலில் கிடைக்க வேண்டும். ஏனெனில் இங்கு ஒவ்வொரு வீரரும் சின்ன சின்ன விஷயங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த போராட்டத்திலேயே அவர்களுடைய கனவு அழிந்து விடுகிறது. அவர்களுடைய தேவைகள் கிடைக்கிறபோது எந்த தடையுமின்றி வேகமாக முன்னேற முடியும்.

அமெரிக்கா தொடர்ந்து சாதிக்கிறது என்றால் அங்கே எந்த நேரத்திலும் பயிற்சி பெறலாம். அதை யாரும் தடுப்பதில்லை. ஆனால் இங்கே அந்த நிலை இல்லையே. மற்ற நாடுகளுக்கும், நமக்கும் ஒரு தலைமுறை அளவுக்கு இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டியது அவசியம். அப்படியொரு மாற்றம் வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாமும் சாதிக்கலாம்” என்றார் நம்பிக்கையோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x