

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் எஃப்46 பிரிவில் 63.97 மீட்டர்கள் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஜஜாரியா. பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
2004 ஏதென்ஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்ட ஜஜாரியா, 62.15 மீட்டர்கள் தூரம் ஈட்டி எறிந்து தங்கத்தைக் கைப்பற்றினார். 12 வருடங்கள் கழித்து 2016 ரியோ பாராலிம்பிக்கில் 63.97 மீட்டர்கள் தூரம் எறிந்த தேவேந்திர ஜஜாரியா,தன்னுடைய முன்னாள் ஒலிம்பிக் சாதனையை முறியடித்துள்ளார்.
ரியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா கூறியதாவது:
ராஜஸ்தானில் நான் பாராலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, எனது 6 வயது மகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன். அது என்னவென்றால், அவள் கிண்டர்கார்டன் தேர்வில் முதல் ரேங்க் வாங்கினால், நான் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வேன் என்பது தான் அந்த ஒப்பந்தம். அதேபோல அவள் முதல் ரேங்க் எடுத்துவிட்டு எனக்கு போன் செய்தாள்.
‘‘அப்பா நான் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். தற்போது உங்களது தருணம் வந்துள்ளது’’ என்றாள். இந்த வார்த்தைகள் மைதானத் தின் நாலா புறத்திலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. இதுதான் என்னை வெற்றி பெற வேண்டும் என தூண்டியது. இவ்வாறு தேவேந்திர ஜஜாரியா கூறினார்.