

கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்துக்கு டிசம்பர் 12-ல் திருமணம் நடைபெறவுள்ளது.
தனது தீவிர ரசிகையான ஜெய்ப்பூர் அரச குடும்பத்துப் பெண்ணை ஸ்ரீசாந்த் திருமணம் செய்யவுள்ளார். இது காதல் திருமணம் எனத் தெரிகிறது.
ஸ்ரீசாந்த் சூதாட்டப் புகாரில் கைது செய்யப்பட்டபோதும் அவருக்கு அப்பெண் துணை நின்றுள்ளார். அப்பெண்ணின் தந்தை ஸ்ரீசாந்தை சிறையில் சென்று சந்தித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
குருவாயூர் கோயிலில் திருமணமும், அதைத் தொடர்ந்து கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டக்காரர்களின் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக பந்து வீசினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த மே 16-ம் தேதி ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார். ஜுன் 11-ம் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீசாந்தி மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்கேற்ற வாழ்நாள் தடை விதித்துள்ளது.
ஸ்ரீசாந்த் மீது மும்பை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகள் முடிவுக்கு வரவில்லை.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட்களில் பங்கேற்று 87 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 53 விக்கெட்டுகளும், 10 இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.