

பணமழை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டது பிசிசிஐ-யிடத்தில் கடும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில் நிச்சயம் இந்த விவகாரம் எழுப்பப்படும். ஒரு சீசனுக்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்ய வேண்டும்.
கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், டிவைன் ஸ்மித், சுனில் நரைன் ஆகியோருக்கு ஐபிஎல் மூலம்தான் பணம் குவிந்துள்ளது. நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்துள்ளது. இவர்கள் மீது இந்திய ரசிகர்கள் வைத்துள்ள அன்பு கற்பனை செய்து பார்க்க முடியாதது. ஆனால் இப்போது முதுகில் குத்தி விட்டார்கள்.
பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல், கொச்சி வரை சென்று மேற்கிந்திய வீரர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்கள் தொடருக்குப் பாதிப்பு வராது என்று கூறிவிட்டு இப்போது பல்டி அடித்துள்ளனர். இதைத்தான் பிசிசிஐ-யினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கொடுத்த வாக்குறுதியை அவர்கள் எப்படி கைகழுவ முடியும்? வர்த்தக நலன்களுக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் எனும்போது, சமரசமற்ற அவர்களது போக்கிற்காக அவர்களை ஏன் தண்டிக்கக் கூடாது?” என்றார் அவர்.
எனவே, ஐபிஎல் கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீரர்களின் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.