

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால், சீனாவின் சன் யுவை எதிர்த்து ஆடினார். இதில் முதல் செட்டை 11-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சாய்னா நெவால் அடுத்த 2 செட்களையும் 21-14, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றார். இதன் மூலம் 11 21, 21 14, 21 19 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த போட்டி 1 மணிநேரம் 11 நிமிடங்கள் நீடித்தது.
இது அவர் பெறும் 2-வது ஆஸ்திரேலியன் ஓபன் பாட்மிண்டன் பட்டமாகும். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு சாய்னா நெவால் இந்த பட்டத்தை வென்றுள்ளார். இந்த தொடரில் பட்டத்தை வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் சாய்னாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கான பிரிவில் நடந்த போட்டியில் டென்மார்க் வீரரான ஹான்ஸ்-கிறிஸ்டியன் 21-16, 19-21, 21-11 என்ற செட்கணக்கில் தென் கொரியாவின் ஜியான் ஹியோக்-ஜின்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.