

ஆஷஸ் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் அளித்த விருந்து நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சினையை கிளப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பெர்த்தில் உள்ள க்ரௌன் கேசினோ ஹோட்டலில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஷேன் வார்ன் விருந்து கொடுத்தார்.
அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் தங்களின் மனைவிகளுடன் பங்கேற்றனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் மது அருந்திவிட்டுச் சென்றதால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த ஹாரிஸ், “பெர்த்திற்கு செல்பவர்கள் க்ரௌன் அல்லது கேசினோவுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் குடித்திருந்தால் உங்களை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள்” என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த டுவிட்டர் கருத்து பின்னர் நீக்கப்பட்டாலும்கூட அதை ஏராளமானோர் பார்த்துவிட்டனர். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமானோர் ஆறுதல் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் மது அருந்திய போதும் விருந்து நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறப்பான முறையில் விருந்து கொடுத்த வார்னுக்கு நன்றி தெரிவித்துள்ள மைக்கேல் கிளார்க், “ஆஸ்திரேலிய வீரர்களும், அவர்களுடைய மனைவிகளும் இந்த விருந்தை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். கிளார்க்கின் மனைவி கெய்லி, “என்னவொரு அற்புதமான விருந்து” என கூறியுள்ளார். “ஹாரிஸ் அனுமதி மறுப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே நான் ஹோட்டலில் இருந்து கிளம்பிவிட்டேன்” என ஷேன் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.