

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி இறுதிப் போட்டியில் நுழைந்தார்.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் போட்டி தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர், 10-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் பெடரர் 6-2, 3-6, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 12-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக்கி கிர்ஜியோஸ் 6-4, 6-7 (9-11), 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரெவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 12-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.