

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. நேற்று நடந்த தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்குகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.3.20 கோடி ஆகும். இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களான வாவ்ரிங்கா, கெவின் ஆண்டர்சன், பெனோய்ட் பைர், ராபர்டோ பாடிஸ்டா உட்பட 32 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இரட்டையர்களுக்கான பிரிவில் இந்திய வீரர்கள் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி உட்பட பலர் ஆடுகிறார்கள்.
தகுதிச் சுற்று
நேற்று நடந்த ஒற்றையர் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் 2-6, 7-5, 6-4 என்ற செட்கணக்கில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வார்டை வீழ்த்தினார். இந்த போட்டி 2 மணிநேரம் 3 நிமிடங்கள் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் சோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்றார். மற்றொரு தகுதிச் சுற்று போட்டியில் ஸ்ரீராம் பாலாஜி குரோஷியாவின் ஆண்டி பாவிக்கிடம் 6-7, 6-7 என்ற நேர் செட்டுகளில் தோற்றார்.
மற்றொரு இந்திய வீரரான சாகேத் மைனேனியை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோ வீழ்த்தினார்.
லியாண்டர் பயஸ் நியமனம்
இந்திய டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், லெஜண்டரி குரூப் நிறுவனத்தின் விளம்பர தூதராக 3 ஆண்டுகளுக்கு நியமிக் கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லியாண்டர் பயஸ், “இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதில் பெருமைகொள்கிறேன். டென்னிஸ் உலகில் மேலும் பல வெற்றிகளைக் குவிப்பேன்” என்று கூறினார்.