Last Updated : 05 Jun, 2016 12:21 PM

 

Published : 05 Jun 2016 12:21 PM
Last Updated : 05 Jun 2016 12:21 PM

கோப்பா அமெரிக்கா: நெய்மர் இல்லாத பிரேசில், ஈக்வடாருடன் அதிர்ச்சி டிரா

கலிபோர்னியாவின், பசடேனாவில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் நெய்மர் இல்லாத பிரேசில் அணி, ஈக்வடார் அணியுடன் கோல் இல்லாத டிரா செய்தது.

ஈக்வடார் வீரர் மில்லர் பொலானோஸின் கோல் ஒன்றை இல்லை என்று கூறியது இந்த ஆட்டத்தில் கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில், ஈக்வடார் வீரர் மில்லர் பொலோனோசின் கிராஸ் ஒன்றை பிடித்த பிரேசில் கோல் கீப்பர் அல்லிசன் பந்தைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியடைய பந்து கோல் கோட்டைத் தாண்டியதாக கருதப்பட்டது. ஆனால் அது கோட்டைத் தாண்டியதா இல்லையா என்பதை முழுக்கவும் கூற முடியவில்லை இது கோல் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பந்து அவுட் என்றனர், இது ஈக்வடார் வீரர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. இது தங்கள் வெற்றி வாய்ப்பை பறித்தது என்றும் வலுவான பிரேஸில் அணிக்கு ஆதரவாக நடுவர் செயல்பட்டதாக ஈக்வடார் பயிற்சியாளர் கடுமையாக சாடினார்.

நெய்மருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, அவர் ரோஸ்பவுல் ஸ்டாண்ட்டிலிருந்து ஈக்வடாருடன், 8 முறை சாம்பியனான பிரேசில் கோல் இல்லாமல் டிரா செய்ததை அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அதே போல் டேவிட் லூயிஸ், மார்செலோ ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார் படுத்திக் கொண்டிருப்பதால் இந்தப் போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் வெறுப்பான ஆட்டத்தில் ஈக்வடார் அணி பிரேசில் பயிற்சியாளர் துங்காவுக்கு மேலும் சிந்திக்க சில புதிய பிரச்சினைகளை பிரேசில் அணிக்கு உருவாக்கித் தந்துள்ளது.

வில்லியன், பிலிப் கூட்டின்ஹோ ஆகியோர் போதிய அச்சுறுத்தல்களை வழங்கினாலும் அந்த கில்லர் அணுகுமுறையைக் காணோம். 17-வது நிமிடத்தில் கூட்டின்ஹோ 25 யார்டிலிருந்து ஆடிய ஷாட் வெளியே சென்றது. பொதுவாகவே பிரேசில் அணியை நீண்ட தூரத்திலிருந்து ஷாட் ஆடவே செய்தது ஈக்வடார் தடுப்பணை.

சுமார் 53,000 ரசிகர்கள் ஆரவாரத்துடன் தீவிரமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் பிரேசில் அணி ஏகப்பட்ட வாய்ப்புகளை சரியாக கோல் அடிக்கும் நகர்த்தலாக மாற்ற முடியாமல் தோல்வி கண்டது. சில ஷாட்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இலக்கை விட்டு விலகிச் சென்றது. ஒரு முறை லுகாஸ் லிமா தலையால் அடித்த ஷாட் நூலிழையில் கோல் வாய்ப்பை விட்டு விலகிச் சென்றது.

முதல் பாதியில் பிரேசில் தனது உத்வேகத்தை வெளிப்படுத்தியது, கூட்டின்ஹோ மற்றும் பிலிப் லூயிஸ் ஆகியோருக்கு இடது புறம் நிறைய இடம் கிடைத்தது. வில்லியனின் வேகம் ஈக்வடார் மூத்த வீரர் வால்டர் அயோவியை அவர் பக்கத்தில் வர முடியாமல் செய்தது.

ஈக்வடார் ஆங்காங்கே அச்சுறுத்தல் கொடுத்தது. பிரேசில் வீரர்களான கேசிமிரோ மற்றும் எலியாஸ் ஆகியோரை ஃபவுல் செய்யத் தூண்டுவதாகவே ஈக்வடார் ஆட்டம் அமைந்தது. ஈக்வடாருக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு இடைவேளைக்கு முன்னதாக நிகழ்ந்தது, என்னர் வாலன்சியாவின் 25 அடி ஃப்ரீ கிக் அருமையாக கோல் நோக்கி செல்ல, பிரேசில் கோல் கீப்பர் அலிசன் அதனை அருமையாகத் தடுத்தார்.

இடைவேளைக்குப் பிறகும் என்னர் வாலன்சியா மூலம் ஈக்வடார் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டது, கடைசியில் வாலென்சியா அருமையாக பந்தை எடுத்து சென்றதும், ஜெஃப்ர்சன் மாண்ட்டிரோவின் கோல் முயற்சியும் இறுதி விசில் மூலம் முடிவுக்கு வந்தது.

மொத்தத்தில் கோல் வாய்ப்புகளை பிரேசில் நழுவ விட்டது பிரேசிலின் இந்த அதிர்ச்சி டிராவுக்குக் காரணம். அடுத்த போட்டியில் பிரேசில் அணி ஹெய்ட்டி அணியை சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x